டெஹ்ரான், ஈரானில் வரலாறு காணாத வகையில் வெயில் வாட்டி வருவதால், பொதுமக்களின் நலன் கருதி இரண்டு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல், மக்கள் வீடுகளில் முடங்கிஉள்ளனர்.
நாடு முழுதும், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது.
அடுத்து வரும் நாட்களில் இது, 50 டிகிரி வரை உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாலைவனத்தால் சூழப்பட்டுள்ள இங்கு, கடும் வெப்பம் காரணமாக மணல் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ஈரானில் நேற்றும், இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பள்ளிகள், வங்கிகள், நீதித்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கால்பந்து விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடும் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் மற்றும் அசம்பாவிதங்களை எதிர்கொள்ளும் விதமாக, நாடு முழுதும் மருத்துவமனைகள் உஷார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, ‘பருவநிலை மாறுபாடு காரணமாக பூமியின் வடதுருவப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளில் வீசி வரும் வெப்ப அலை, வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என, புவியியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement