மும்பை, மஹாராஷ்டிராவில், சம்ருத்தி விரைவுச்சாலையின் பாலம் கட்டுமானப் பணியின் போது, ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில், இரு தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் பலியாகினர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில், சம்ருத்தி விரைவுச்சாலை போடப்பட்டு வருகிறது. 701 கி.மீ., நீளமுள்ள இந்த சாலை, நாக்பூர், வாஷிம், வார்தா, அகமது நகர், புல்தானா, அவுரங்காபாத், அமராவதி, ஜல்னா, நாசிக், தானே ஆகிய மாவட்டங்களை கடந்து செல்கிறது.
இந்நிலையில், தானே மாவட்டத்தின் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள சர்லாம்பே கிராமம் அருகே, சம்ருத்தி விரைவுச்சாலைக்காக, பாலம் கட்டுவதற்கான பணிகள் நேற்று அதிகாலை நடந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில், 20 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கினர்.
இதில், தமிழகத்தின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ், 36, நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த கண்ணன், 23, ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், காயம் அடைந்த மூன்று பேரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
விபத்தில் உயிர்இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, மத்திய அரசு சார்பில், தலா 2 லட்சம் ரூபாய்; மஹாராஷ்டிரா அரசு சார்பில், தலா 5 லட்சம் ரூபாய் நிதிஉதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்