புதுடில்லி: செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது மிக மிக அவசியம் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறி உள்ளது. இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில் கூறியதாவது: செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.
விசாரணைக்கு விடாமல், செந்தில்பாலாஜி இடையூறு செய்தார். அதிகாரிகள் விசாரணை நடத்த முடியாத அளவிற்கு தடுத்தார். மருத்துவமனையில் இருந்த காலத்தை நீதிமன்ற காலமாக எடுக்கக் கூடாது.
அவரை, தனிப்பட்ட முறையில் விசாரிப்பது என்பது மிக மிக அவசியம். வாக்குமூலம் பெறும் போது செந்தில்பாலாஜி ஒத்துழைப்பு தரவில்லை. ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் தான் கைது செய்தோம்.
செந்தில்பாலாஜி செய்த குற்றங்களின் அடிப்படையிலும், விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினாலும் நள்ளிரவு 1:39 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டார். பிறகு, நெஞ்சுவலி என அவர் கூறியதால் 2:10 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டாலும், அவர் அமலாக்கத்துறை கஸ்டடியில் இல்லை.
கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் போலீஸ் அல்லது நீதிமன்ற கஸ்டடி கொடுத்தாக வேண்டும். காவலில் எடுத்து விசாரணை செய்ய பல காரணங்கள் உள்ளது. காவலில் எடுக்க அனுமதிக்காவிட்டால், விசாரணை தடைபடும்.
கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்ற காவலில் இருக்கும் போது ஆட் கொணர்வு மனு தாக்கல் என்பது சரியானது அல்ல என நாங்கள் வாதாடினோம்.
செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு 3 காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது . இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார்.
ஒத்திவைப்பு
அமலாக்கத்துறையின் வாதத்தில் ‘நேரத்தை கருத்தில் கொண்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு’ கோரியிருந்தது. அமலாக்கத்துறை வாதம் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement