புதுடில்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான வழக்கில், டில்லி போலீசாரின் விசாரணை தனக்கு திருப்தி அளிப்பதாகவும், வழக்கை முடித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், புகார் கொடுத்திருந்த சிறுமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., – எம்.பி.,யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனையருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ‘மைனர்’ சிறுமி உள்ளிட்ட சில மல்யுத்த வீராங்கனையர் புகார் அளித்திருந்தனர்.
பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனையர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர் மீது டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிரிஜ் பூஷன் மீது பொய் புகார் கொடுத்ததாக, அந்த சிறுமியின் தந்தை போலீசாரிடம் தெரிவித்தார்.
சிறுமிக்கு தொல்லை கொடுத்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், இந்த வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்றும், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த சிறுமி மற்றும் அவரது தந்தையிடம், நீதிபதி சாவ்வி கபூர் விசாரணை நடத்தினார். அப்போது, ‘வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்த போலீசாரின் முடிவில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. விசாரணை திருப்தி அளிக்கிறது’ என, இருவரும் தெரிவித்தனர்.
இந்த வழக்கு மீதான தீர்ப்பை, அடுத்த மாதம் 6ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement