“அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் அப்படிச் சொல்லவில்லை” – சீமான்

சென்னை: “சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை. அநீதிக்கு எதிரான புரட்சித் தீயை பற்ற வைக்கவே நான் வந்தேன் என்று இயேசு கூறினார். எங்கே அந்தத் தீ. இந்த நாட்டில் மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது. இதை எப்படி சகித்து கொள்கிறீர்கள்? 58 நிமிடம் அக்கறையாக பேசினேன். 2 நிமிடம் பேசியது மட்டுமே தெரிகிறது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. என்னுடைய பேரன்பின் வெளிப்பாடுதான் இது. என்னுடைய பெரும் கோபத்தில் உள்ள பேரன்பினை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?

இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு திமுக, காங்கிரஸ் செய்த ஒரு நன்மையை சொல்ல முடியுமா? தவறு என்று தெரிந்தால், சுட்டிக்காட்டுவது எனது கடமை. சாத்தான் என்பது குர்ஆன் மற்றும் பைபிலில் உள்ளது. இதை நான் கூறவில்லை. நபிகள், இயேசு கூறியுள்ளனர். சாத்தானின் செயல்களை இந்த ஆட்சியாளர்கள் செய்கின்றனர். அநீதி இழைப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பது யார்? குர்ஆன் சாத்தானின் நண்பர்கள் என்று கூறுகிறது. நான் சாத்தானின் குழந்தைகள் என்று கூறிவிட்டேன். இதை வேண்டும் என்றால் தவறு என்று கூறலாம்.

மதத்தை வைத்து மனிதர்களை கணக்கிடுவது என்பது உலக வரலாற்றில் இல்லை. எல்லாவற்றையும் விட பெரியது மொழி, இனம்தான். இங்கு உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்கள். சிறுபான்மை என்று கூறினால் நான் வெறிகொண்டு விடுவேன். யார் சிறுபான்மை? சிறுபான்மை என்று எப்படி கூறுகிறார்கள். மதம் மாறிக் கொள்ளலாம். மொழி, இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது.

அநீதிக்கு துணை நிற்பர்களை கூறினேன். மொத்தமாக அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் கூறவில்லை. அவர்கள் சாத்தானின் குழந்தைகள் என்று கூறவில்லை. சாத்தானின் குழந்தைகளாக மாறி வீட்டீர்களே என்று ஆதங்கப்படுகிறேன். அநீதிக்கு தொடர்ந்து துணை நின்று கொண்டுள்ளீர்கள். எனக்கு பதில் சொல்ல வேண்டாம். இறைவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்” என்று சீமான் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.