கலப்பை பிடித்தவர்களுடன் கைகோத்த தன்னம்பிக்கை பெண்… `மனிதி' செல்வி | போராட்டக்களத்தில் பெண்கள் -3

நாட்டின் தலைநகரமான டெல்லி, 2020-2021-ம் ஆண்டில் விவசாயிகளின் கோட்டையாக இருந்தது. கலப்பை பிடித்த கைகள், விவசாய மசோதாவுக்கு எதிராக கரம் உயர்த்திப் போராடின. விவசாயிகளின் உரிமைக்காக ஓங்கி ஒலிக்கும் குரல்களில் பெண்களின் குரல்களும் சேர்ந்ததால் அதன் வீரியம் அதிகரித்தது.

ஆணுக்கு நிகராக பெண்கள் களத்தில் உரிமைக்காக குரல் கொடுத்தபோது ஆண் வேறு பெண் வேறு என்ற கருத்துகள் சுக்குநூறாகின. டெல்லி விவசாயிகளுடன் கரம் கோக்க தமிழகத்திலிருந்து கிளம்பிய பெண்தான் செல்வி. போராட்டக்களத்தில் பெண்கள் தொடரில், இந்த வாரம் செயற்பாட்டாளர் செல்வியின் அனுபவங்களை அறிவோமா….

செல்வி

செல்வி பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை சென்னையை நோக்கி திசை திரும்பியுள்ளது. செல்வியின் குடும்பம் பெரியாரிய கருத்துகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததால், செல்விக்கும் அதன் தாக்கம் இருந்தது. சமூகத்தில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வுகள் தெரியாமலேயே வளர்ந்தவருக்கு, கல்லூரி வாழ்க்கை சமூகத்தின் கொடூரமான முகங்களைக் காட்டியுள்ளது.

தன்னுடன் படிக்கும் சக தோழிகளின் வீட்டில் விதிக்கும் கட்டுப்பாடுகள், செல்வியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. பெண் என்ற பாலினத்தின் அடிப்படையில் தங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும், தங்கள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களையும் பொறுத்துக் கொள்ளாமல் நண்பர்கள் குழுவுடன் பொங்கி எழக்கூடியவராக செல்வி கல்லூரி காலத்திலேயே இருந்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு சட்டம் படித்த இவர், முழுநேர செயற்பாட்டாளராகப் பயணிக்கிறார். சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகச் செயல்பட ‘மனிதி’ என்ற அமைப்பை பல பெண்களுடன் இணைந்து ஆரம்பித்து, பெண்களுக்காகத் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், நாடெங்கும் மக்கள் கொந்தளித்தனர். பெண்ணின் மாதவிடாய் காலம் தீட்டாக்கப்பட்டது தான் இதற்கு காரணமாக இருக்க முடியும். அனைத்து மக்களும் கொதித்தெழுந்தாலும் சபரிமலைக்குச் செல்வதற்கு சில பெண்கள் துணிச்சலுடன் புறப்பட்டனர். அவர்களில் செல்வியும் ஒருவர். இந்தச் சம்பவம் குறித்த அனுபவத்தை செல்வி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

“இதற்கு முன் சபரிமலையில் பெண்கள் அய்யப்பனை தரிசித்தது வரலாற்று ரீதியாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் இடையில் நடைமுறைக்கு வந்த பழக்கவழக்கங்களால் பெண்கள் நிராகரிக்கப்பட்டனர். நாங்கள் பத்து பெண்களாக சபரிமலைக்குச் செல்ல முடிவெடுத்தோம். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடன் வந்த மற்ற பெண்களுக்கு அதிகமான பக்தி உணர்வு இருந்தது. என்னுடன் சபரிமலைக்குப் புறப்பட்ட பெண் ஒருவர் ‘அய்யப்பனுக்கு நெய்தேங்காய் கொடுத்ததாலேயே தனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. தனக்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுத்த அய்யப்பனை நேரில் தரிசிக்க வேண்டும். 50 வயது கடந்துவிட்டால் உயிருடன் இருப்பேனா என்று கூட தெரியாது’ என்று கூறியது என்னை அதிகளவு பாதிப்புக்குள்ளாகியது. கடவுள் இருக்கிறார், இல்லை என்ற வாதத்திற்குள் செல்லாமல் ஒருவரின் ஆழ்ந்த நம்பிக்கை பாலினத்தின் பேரால் சீர்குலைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நாங்கள் சபரிமலைக்குச் செல்வதை கேரள காவல்துறைக்கு தெரியப்படுத்திய பிறகே தமிழகத்திலிருந்து புறப்பட்டோம். ஆனால் எங்களுக்குப் போதுமான ஒத்துழைப்பை காவல்துறை தராததால் சபரிமலைக்கு எங்களால் செல்ல முடியவில்லை. பம்பை வரை தான் செல்ல முடிந்தது. இருந்த போதும் பல காலங்களாக 10 வயது முதல் 50 வயதுக்குள்ளான பெண்களின் கைகூட படாத பம்பை நதியில் நாங்கள் குளித்தோம். நதியில் குளிப்பது சாதாரணமானது என்றாலும் பாரம்பர்ய பிரியர்கள் மத்தியில் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது” என்கிறார்.

சபரிமலை பயணத்தில் செல்வி

சபரிமலைக்குச் சென்றதுடன் பாலின சமத்துவத்துக்கான பயணத்தை நிறுத்திக் கொள்ளவில்லை செல்வி. எப்போதெல்லாம் பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட மற்ற பிரிவினருக்கும் அநீதி நிகழ்கிறதோ அப்போதெல்லாம் செல்வியின் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அரசையே உலுக்கிய விவசாய மசோதாவிற்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் செல்வி கலந்துகொண்டார்.

அவர், “விவசாயிகள் தங்களுடன் போராடுவதற்கு கரம் கோக்க வாருங்கள் என்று பொதுமக்களை அழைத்தனர். அவர்களின் அழைப்புக்கு இசைவு கொடுக்கும் நோக்கத்தில் டெல்லி சென்றோம். இந்தப் போராட்டத்தில் பெண் விவசாயிகளின் பங்களிப்பு அளப்பரியது. போராட்டத்திற்குத் தேவையான பதாகைகள் தயாரிப்பது, போராட்டக்களத்தில் செயல்படுவது, போராட்டத்தில் ஆண்கள் செயல்படும்போது விவசாயத்தை கவனித்துக் கொள்வது போன்ற அனைத்து வேலைகளிலும் பெண்கள் பங்களித்தனர். இந்தியாவின் தலைநகர் விவசாயிகளின் போராட்டத்தின் போது பாலின சமத்துவத்தை உயர்த்திப் பிடித்தது. விவசாயிகள் அனைவருக்கும் ஒரே இடத்தில் சமூக சமையலறையின் மூலம் உணவு தயாரிக்கப்பட்டது. உணவு ஏற்பாட்டில் ஆண்களும் பெண்களும் இணைந்தே தயார் செய்தனர்.

அனைவரின் துணிகளும் ஒரே இடத்தில் துவைக்கப்பட்டன. துணி துவைக்கும் பணியில் ஆண்கள் கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொண்டனர். எதெல்லாம் பெண்களுக்கான வேலைகளாக மட்டும் இதுவரை சமூகம் கட்டமைத்துவைத்திருந்ததோ அந்த வேலைகளெல்லாம் பொதுமைப்படுத்தப்பட்டன. விவசாயிகள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு அருகில் இருந்த வணிக வளாகங்களையும், தாங்களே ஏற்படுத்திய கழிவறையும் பயன்படுத்தினர்.

ஆனால் கழிவறைக்குத் தேவையான தண்ணீரையும் மத்திய அரசு நிறுத்துகையில் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால் அரசு, தண்ணீர் தொட்டிகள் மூலம் போராடும் விவசாயிகளுக்கு உதவியது. கழிவறைக்கும் குளிப்பதற்கும் உணவுக்கும் சிரமம் இருந்தாலும் விவசாயிகளுக்குள் சொல்லப்படாத திட்டமிடலும் ஒத்துழைப்பும் இருந்ததைப் பார்க்க முடிந்தது. குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் பெண்களும் குழந்தைகளுமே அதிகளவில் பங்கேற்றனர்” – கள நிலவரத்தை விவரிக்கிறார்.

விவசாய போராட்டத்தில் உணவு தயாரிப்பின் போது

உரிமைக்காக சமூகமாக எழுந்து குரல் கொடுக்கையில் பாலின பேதங்கள் தகர்க்கப்படுவதை விவசாயிகளின் போராட்டம் காட்சிபடுத்தியுள்ளது. மனிதி அமைப்பானது முற்போக்கு இயக்கங்களில் பங்காற்றும் பெண்களையும், பாதிக்கப்படும் பெண்களையும் உள்ளடக்கிய பெண்களுக்கான கூட்டமைப்பாக இயங்கி வருகிறது.

பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளால் தொடர்ந்து போராடினாலும் வன்முறைக்கான வேராக இருக்கும் ஆணாதிக்கத்தைக் களைய ஆரோக்கியமான உரையாடலும் ஆத்மார்த்தமான பணிகளும் தேவைப்படுகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் தளத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காகவும், பெண் உடல் மீது திணிக்கப்பட்ட புனிதத்தன்மையை உடைத்தெறிவதற்காகவும் கல்லூரி மாணவர்களிடமும், விளிம்புநிலை பெண்களிடமும் தொடர் உரையாடலை மேற்கொள்ளப் போவதாக செல்வி தெரிவிக்கிறார்.

பெண்களின் பிரச்னைகளை தனிப்பட்ட பிரச்னைகளாக சமூகம் நினைக்கிறது. இக்கருத்து களையப்பட்டு பெண்களின் பிரச்னைகளை பொது சமூகத்தின் பிரச்னையாகக் கருதி அனைவரும் பாலின விடுதலைக்காக இணைந்து பயணிக்க கைக்கோக்க வருமாறு அனைவரையும் அழைக்கும் செல்வியுடன் நாமும் இணைவோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.