பா.ஜ.க பெண் நிர்வாகியோடு ஏற்பட்ட பிரச்னையால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும், பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவும், அண்ணாமலையின் புகழ்பாடும்விதமாகவும் சமூக வலைதளங்களில் களமாடிவந்தார் திருச்சி சூர்யா. இப்படிப்பட்ட மனிதர் திடீரென, ‘கூடிய விரைவில் அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும்’ என்று கோபமாக ட்வீட் போட்டுவிட்டார். என்ன நடந்தது என்று விசாரித்தால், “கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யாவிடம், ‘எப்படியாவது மீண்டும் கட்சியில் இணைத்து, பொறுப்பு வாங்கிக் கொடுக்கிறேன்’ என்று வாக்கு கொடுத்திருந்தார் அண்ணாமலை. அவருக்காக மாதக்கணக்கில் களமாடியும் எதுவும் நடக்காததால், சமீபத்தில் நேரில் சந்தித்திருக்கிறார் சூர்யா. ‘உடம்பை ஃபிட்டாக வெச்சுக்கோங்க… பாதயாத்திரையின்போது, உங்களைக் கட்சியில் சேர்ப்பதாக அறிவித்துவிடுகிறேன். சேர்ந்து நடப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்.

நடைப்பயண நேரத்தில் அந்த வாக்குறுதியை அண்ணாமலை காற்றில் பறக்கவிட்ட கோபத்தில்தான் இப்படிப் பொங்குகிறார் திருச்சி சூர்யா” என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்!
பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியினரைச் சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே. ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் என 25 பேர் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது, தி.மு.க-விடம் எத்தனை சீட்டுகள் கேட்கலாம் என்பது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கவிருக்கிறார்களாம்.

கூட்டத்தில் பங்கேற்கும் 25 பேரும் தலா ஒரு சீட் கனவோடு போகிறார்கள் என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் சத்தியமூர்த்தி பவனில். கூட்டத்தில் புதிய மாநிலத் தலைவர் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்பதால், அந்த சீட்டுக்காகவும் சிலர் காய்நகர்த்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
உள்ளாட்சித் தேர்தல் சீட் பேரம் தொடங்கி பெண் நிர்வாகிகளை மரியாதைக் குறைவாக நடத்தியது வரையிலான புகார்களால், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சிவபத்மநாதனின் பதவி சமீபத்தில் பறிபோனது. இதனால் அதிருப்தியில் இருக்கும் சிவபத்மநாதன், புதிய மாவட்டச் செயலாளர் ஜெயபாலனுக்கு எதிராகக் காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

சமீபத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அவசரக் கூட்டம் நடத்தியவர், “ஜெயபாலனுக்கு யாரும் ஒத்துழைக்கக் கூடாது, ‘எனக்கு சுரண்டை நகர் செயலாளர் பதவியே போதும்’ என்று அவர் வாயாலேயே தலைமையிடம் சொல்லவைக்க வேண்டும்” என்றெல்லாம் ஆலோசனை சொன்னாராம். கட்சி சார்ந்து ஜெயபாலன் நடத்தும் முதல் நிகழ்ச்சி எதுவானாலும், அவருக்கு எதிராகப் பிரச்னையைக் கிளப்பவும் இந்தப் புரட்சிப்படை தயாராகிறது என்கிறார்கள்.
மேற்கே கனிம வளத்துறை தொடர்பான அனைத்து விவகாரங்களையும், அந்த இரண்டு எழுத்து நிறுவனம்தான் கவனிக்கிறது. சமீபத்தில் குவாரிகள் ஒவ்வொன்றிலும் தகுதிக்கேற்ப 15 முதல் 50 லட்டுகள் என வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார்கள் அந்த நிறுவனத்தினர். ஏற்கெனவே, ‘யூனிட்டுக்கு இவ்வளவு, டிரான்சிட் பாஸுக்கு இவ்வளவு என ஸ்வீட் கொடுக்கிறோமே?’ என்று குவாரி உரிமையாளர்கள் கேட்டால், ‘அது வேறு… இது கட்சி வளர்ச்சி நிதிக்காக’ எனக் காரணம் சொல்கிறார்களாம். “இதற்கு முன்பிருந்த நிறுவனமாவது அமைச்சர் பெயரைச் சொல்லித்தான் இனிப்பு கேட்டது. புதியவர்களோ, கட்சி நிதி என மேலிடத்துப் பெயரைச் சொல்லியே வாரிக்குவிக்கிறார்கள்” என்று புலம்புகிறார்கள் குவாரி உரிமையாளர்கள்.
புதுச்சேரியில் கடந்த ஜூலை 31-ம் தேதி, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மாதாந்தர உதவித்தொகை திட்டம், சமையல் எரிவாயுக்கு 300 ரூபாய் மானியம் வழங்குவது உள்ளிட்ட நான்கு திட்டங்களின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ‘மத்திய அரசின் நிதியில்தான் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி கண்டிப்பாக நம்மை இருட்டடிப்பு செய்துவிடுவார். எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும்’ என ரகசியக் கூட்டம் போட்டு முடிவெடுத்திருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். அவர்கள் நினைத்ததுபோலவே அந்த அரசு விழாவுக்கான அழைப்பிதழில், ‘முதலமைச்சரின் திட்டம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன், மோடியின் படமும் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

உடனே உஷாரான பா.ஜ.க-வினர், பிரதமர் மோடியின் படத்தைப் பெரிதாகவும், முதல்வர் ரங்கசாமியின் படத்தை சிறியதாகவும் போட்டு, பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் படங்களுடன் நகர் முழுவதும் ராட்சத பேனர்களை வைத்துவிட்டார்கள். அத்துடன் அனைத்து தினசரிகளிலும் பா.ஜ.க-வின் திட்டம்போல முழுப்பக்க விளம்பரம் கொடுத்து, முதல்வர் ரங்கசாமிக்கே ஷாக் கொடுத்திருக்கிறார்கள்!
உள்ளூர் அமைச்சர் கோஷ்டி, மா.செ கோஷ்டி என இரு பெரும் பிளவாகப் பிரிந்து கிடக்கும் ‘ஜில்’ மாவட்ட ஆளுங்கட்சியில், புதிதாக மூன்றாவது கோஷ்டியை உருவாக்கிவருகிறாராம் மா.செ-வின் வாரிசு. அரசியல் வாசமே தெரியாமல் வளர்ந்த மகனை திடீரென களத்தில் இறக்கி, நகராட்சி துணைத் தலைவர் நாற்காலியில் உட்காரவைத்த கையோடு, கட்சி அணி ஒன்றின் மாநிலப் பொறுப்பையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் மா.செ. பதவி நாற்காலியில் உட்கார்ந்த கையோடு, சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு தனக்கென ஓர் ஆதரவு வட்டத்தை ஏற்படுத்திவிட்டாராம் வாரிசு.
கூடவே, இல்லீகல் காட்டேஜுகளை லீகலாக மாற்றித் தருகிறேன், டிரான்ஸ்ஃபர் வாங்கித் தருகிறேன் என ஏகத்துக்கும் ஆட்டம் போடவும் தொடங்கிவிட்டாராம். `இது எங்கே போய் முடியப் போகுதுன்னு தெரியலயே…’ என்று மா.செ-வின் ஆதரவாளர்களே தலையைச் சொறிவதுதான் வேடிக்கை!