நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு செயலருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு 

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு துறை செயலர் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட 2 வார சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் பழைய பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் தோட்டப்பணியாளராக பணிபுரிந்து 2006-ல் ஓய்வு பெற்றார். தனது பணியை 1979-ல் இருந்து வரன்முறைப்படுத்தி, அதற்குரிய பணப்பலன்களை வழங்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை பரிசீலிக்க 2012-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பள்ளிக்கல்வித் துறை தாக்கல் செய்ய மேல்முறையீடு மனு தள்ளுபடியானது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப்யாதவ் (தற்போது நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார்), ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் முத்துபழனிசாமி, நெல்லை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலஆண்டோ ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ஞானபிரகாசம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது பிரதீப்யாதவ் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையேற்க மறுத்து பிரதீப்யாதவ் உட்பட 3 பேருக்கும் 2 வார சிறை, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தும், 3 பேரும் ஆக. 9-க்குள் உயர் நீதிமன்ற பதிவாளர் முன்பு சரணடைய வேண்டும் என்றும் புதன்கிழமை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை 2 வார சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும் அரசு தரப்பில் வியாழக்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் பிரதீப்யாதவ் உட்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட 2 வார சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.