`பிலீவ் மீ கார்கே சார்.. திருமணமாகி 45 வருடங்களாகின்றன, ஒரு முறைகூட கோபமடைந்ததில்லை'- ஜக்தீப் தன்கர்

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் அரசின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை முன்வைத்தன. அதையடுத்து, ஆகஸ்ட் 8-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம்மீதான விவாதம் நடத்தப்படும் என அறிவித்தார் ஜக்தீப் தன்கர். இன்றுவரை மணிப்பூர் விவகாரம் விவாதிக்கப்படாமல், பல்வேறு தடங்கல்களும், நாடாளுமன்ற ஒத்திவைப்புகளும் அரங்கேறி வருகின்றன.

மல்லிகார்ஜுன கார்கே – மோடி, அமித் ஷா

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதம் விதி 267-ன்கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் குரலெழுப்பி வருகின்றன. இந்தப் பிரச்னையைப் பற்றி விவாதிக்க மதியம் ஒரு மணிக்கு மாநிலங்களவை சபாநாயகரான உங்கள் அறையில் ஒரு சந்திப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். இது போன்ற ஒரு சிறிய ஆலோசனையைக்கூட நீங்கள் ஏற்கவில்லை.

நாங்கள் பிரதமரிடம் கேள்வி கேட்கவும் அனுமதிப்பதில்லை. இது எங்களுக்குப் புரியவில்லை. உங்களைச் சந்தித்தபோது கோபமடைந்தீர்கள்” எனக் கூறினார். காங்கிரஸ் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சபாநாயகர் ஜக்தீப் தன்கர், “நானா கோபமடைந்தேன்… அதிகாரத்தின்மீது கோபம் காட்ட எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள்தான் அதிகாரம், நான் ஒருபோதும் கோபப்படுவதில்லை. தயவுசெய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். என்னை நம்புங்கள், எனக்குக் கோபம் வராது.

ஜக்தீப் தன்கர்

எனக்குத் திருமணமாகி 45 வருடங்களாகின்றன… எனக்கு எப்படி கோபம் வரும்?” என கேலியாகப் பேசினார். அதற்கு பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே, “அநேகமாக, நீங்கள் உங்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் கோபப்படுகிறீர்கள்” என்றார். அதற்கு சிரித்துக்கொண்டே, பதிலளித்த ஜகதீப் தன்கர், “என் மனைவி இங்கு உறுப்பினராக இல்லை. இருந்திருந்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும். நாமே விவாதித்திருக்கலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.