மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை திரும்ப பெற்றது மத்திய அரசு

சென்னை: மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் எல்இடி பல்புகளை பொருத்தும் திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்தாததால், மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடி நிதியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் எல்இடி பல்ப், டியூப்லைட் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துமாறு மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

எல்இடி பல்ப்: மேலும், இப்பணிகளை மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் போது மாநில அரசுகளுக்கு நிதியுதவியும் செய்கிறது. கன்னியாகுமரி, தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 159 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கன்னியாகுமரி, தருமபுரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 103 அரசுப் பள்ளிகளில் 9 வாட்ஸ் திறனில் 740 எல்இடி பல்ப், 20 வாட்ஸ் திறனில் 7,500 எல்இடி டியூப் லைட் மற்றும் 5,200 மின்விசிறி ஆகியவற்றைப் பொருத்த இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்தது.

ஒப்பந்தப்புள்ளி: இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் 2 நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், தகுதியான நிறுவனத்தைத் தேர்வு செய்து பணிகள் வழங்கப்படவில்லை. அத்துடன்,திட்டமிட்டபடி கடந்த மார்ச்மாதத்துக்குள் பணிகள்தொடங்கப்படவில்லை.

இதையடுத்து, இத்திட்டப் பணிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடியை, மத்திய மின்துறையின் மின் சிக்கன நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

விரைவில் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, மத்திய அரசிடம் இருந்து மீண்டும் நிதியுதவியைப் பெற்றுஇதற்கான பணிகள் தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.