"வெறுப்புணர்வு".. ஹரியானா கலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கருத்து..

சென்னை:
ஹரியானாவில் பயங்கர கலவரம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாஜகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் யாத்திரை நடைபெற்றது. அப்போது நுஹ் பகுதியில் யாத்திரை சென்ற போது மற்றொரு தரப்புக்கும், யாத்திரை சென்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக ஏற்பட்ட மோதல் பின்னர் பெரிய மதக்கலவரமாக மாறியது. இந்தக் கலவரம் மற்ற பகுதிகளுக்கும் காட்டுத் தீயாக மாறியது.

இந்தக் கலவரத்தின் ஒருபகுதியாக, குருகிராமில் உள்ள மசூதி தீக்கிரையாக்கப்பட்டு அங்கிருந்த இமாம் கொல்லப்பட்டார். இப்போது வரை ஹரியானா மதக்கலவரத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் பல இடங்களில் இருதரப்புக்கும் இடையே பயங்கர சண்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த கலவரம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில், “வெறுப்புணர்வும், பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது. கலவரக்காரர்கள் எந்த தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஹரியானா அரசினை வலியுறுத்துகிறேன்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாஜகவை வெறுப்புணர்வு கட்சி, பிரிவினைக் கட்சி என தொடர்ந்து விமர்சித்து வரும் ஸ்டாலின், தனது ட்வீட்டிலும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.