இனி உங்கள் அழைப்புகளுக்கு தானாக பதில் அளிக்கும் True caller ஏஐ

ட்ரூ காலர் செயலியில் தற்போது ஏஐ அசிஸ்டன்ட் மூலமாக அழைப்புகளை தானாகவே பதில் அளிக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், உங்களுக்குத் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலோ அல்லது வரும் அழைப்பில் நீங்கள் பேச விரும்பவில்லை என்றாலோ அல்லது அந்த அழைப்பை உங்களால் ஏற்க முடியவில்லை என்றாலோ உங்களுக்கு பதிலாக ட்ரூ காலர் அசிஸ்டன்ட் தானாகவே அந்த அழைப்பை ஏற்று பதிலளிக்கும். 

உங்களால் அழைப்பை ஏற்க முடியாதபடி ஃபோனை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றிருந்தாலும் இந்த அம்சம் உங்களுக்கு உதவியாக இருக்கும். கடந்த ஆண்டு உலக அளவில் தொடங்கப்பட்ட ட்ரூகாலர் அசிஸ்டன்ட் அம்சம் இப்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. ஆனால் இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆண் மற்றும் பெண் என மொத்தம் ஐந்து வகையான குரல்களில் ட்ரு காலர் அசிஸ்டன்ட்டை நீங்கள் செட் செய்து கொள்ளலாம். குறிப்பாக இந்த ஏஐ அசிஸ்டன்ட் இந்தி தமிழ் போன்ற இந்தியாவின் பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது. 

இதைப் பயன்படுத்த விரும்புவோருக்கு தொடக்கத்தில் 14 நாட்கள் இலவசமாக சோதித்துப்பார்க்கக் கிடைக்கிறது. 14 நாட்கள் முடிந்த பிறகு ட்ரூ காலர் பிரீமத்திற்கு நீங்கள் சந்தா செலுத்தினால் மட்டுமே உங்களால் இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த முடியும். அது மாதத்திற்கு ரூ.149 அல்லது ஆண்டுக்கு ரூ.1499 என்ற கட்டணத்தில் கிடைக்கிறது. அல்லது ஆண்டுக்கு 5000 ரூபாய் சந்தா நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ட்ரூ காலர் கோல்ட் சேவையையும் நீங்கள் தேர்வு செய்யலாம். 

இந்த வாய்ஸ் அசிஸ்டன்ட்டை வேறு சில விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். ஸ்பீச் டு டெக்ஸ்ட் என்ற அம்சம் மூலமாக நிகழ்நேர அழைப்பை எழுத்து வடிவில் ட்ரான்ஸ்கிரிப்ட் செய்து உங்கள் மொபைலில் காண்பிக்கும். இதனால் உங்கள் அசிஸ்டன்ட் அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் என்ன உரையாடுகிறார்கள் என்பதை நீங்கள் எழுத்து வடிவில் படிக்க முடியும். இதில் அழைப்பைந் பதிவுசெய்யும் அம்சமும் இருப்பதால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதையும் உங்களால் பின்னர் கேட்க முடியும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.