ஜூலை 31-ம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சில காரணங்களால் பலர் இன்னமும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்…
ஜூலை 31-ம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றாலும், இப்போதும் தாரளாமாக வருமான வரி தாக்கல் செய்யலாம். ஆனால் வருமானத்திற்கு ஏற்ப அபாரதம் மட்டும் கட்ட வேண்டியதாக இருக்கும். ஆண்டு வருமானம் ரூ.5,00,000-க்குள் இருந்தால், ரூ.1,000 அபாரதமும், ரூ.5,00,000-க்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபாரதம் செலுத்த வேண்டும். கூடுதலாக, 234A, 234B, 234C பிரிவுகளின் கீழும் வட்டிகள் விதிக்கப்படும். இது 2023 டிசம்பர் 31 வரை மட்டுமே.

2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு மேல், கடந்த நிதியாண்டின்(2022-23) வருமான வரியை தாக்கல் செய்கிறீர்கள் என்றால் வருமானத்திற்கான வரி + ரூ.1,000/ 5,000 அபாரதம் + உங்கள் வருமானத்திற்கு 25% கூடுதல் வரி + 234A, 234B, 234C பிரிவுகளின் கீழ் வட்டி கட்ட வேண்டும்.
ஒருவேளை அடுத்த மதிப்பீட்டு ஆண்டில் (2024-25) வருமான வரி தாக்கல் செய்கிறீர்கள் என்றால் வருமானத்திற்கான வரி + ரூ.1,000/5,000 அபாரதம் + உங்கள் வருமானத்திற்கு 50% கூடுதல் வரி + 234A, 234B, 234C பிரிவுகளின் கீழ் வட்டி கட்ட வேண்டும்.
பொதுவாகவே, கடந்த இரண்டு நிதியாண்டுகளுக்கான வருமான வரி தாக்கலை நடப்பு நிதியாண்டில் செய்யலாம். ஆனால் தாமதத்திற்கேற்ப அபராதமும், வரிக்கு வட்டியும் ஏறும்.
வருமானம் என்று வந்துவிட்டாலே நிச்சயம் அதற்கு வரி கட்ட வேண்டும். ஒருவேளை கட்டவில்லை என்றால் சிறை தண்டனை வரை பெறும் வாய்ப்புகள் உள்ளது.

நாமே சரியாக வரி கட்டிவிட்டால் அபாரதம் மட்டும் தான் கட்ட நேரிடும். ஒருவேளை அரசே கண்டுபிடித்தால் வருமானத்திற்கு 60% வரி மற்றும் சிறை தண்டனை பெற வாய்ப்புகள் உள்ளது.
வருமான வரியை சரியாக தாக்கல் செய்து, வரி கட்டினால் எந்தவிதமான கடன் வாங்குவதும் எளிது. மேலும் தொழில் நஷ்டம் ஏற்பட்டால் கணக்கு காட்டுவது மிக எளிதாக இருக்கும்.
கடன்களை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து வருமான வரி தாக்கல் செய்திருந்தால் தான் கடன் வாங்க முடியும். அதற்காக ஒரே நேரத்தில் மூன்று ஆண்டுகளுக்கான வரியை தாக்கல் செய்து கடன் வாங்க முடியாது. கடைசி நேரத்தில் திண்டாடமல் இருக்க மற்றும் எந்தவொரு சட்ட சிக்கலிலும் சிக்காமல் இருக்க, அவ்வப்போது வருமான வரி தாக்கல் செய்து, வரி கட்டுங்கள் மக்களே” என்றார்.