ராகுல் காந்தி சக்சஸ்… இந்தியா கூட்டணிக்கு முதல் வெற்றி… 2024 தேர்தலுக்கு பலே வியூகம் ரெடி!

ராகுல் காந்தி மீண்டும் எம்.பி ஆனார். வெறுப்புணர்விற்கு எதிரான அன்பின் வெற்றி இது. உண்மை மற்றும் நீதி வலுவாக நிலைநாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மீண்டும் ராகுல் காந்தி நுழையப் போகிறார். மோடி – அதானி நட்பு முதல் மணிப்பூர் விவகாரம் வரை ஆளும் பாஜக அரசை கேள்விகளால் துளைத்தெடுக்க உள்ளார். இப்படித்தான்
காங்கிரஸ்
கட்சியினர் சமூக வலைதளங்களில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

அவதூறு வழக்கும், தண்டனையும்

மோடி குறித்த அவதூறு பேச்சிற்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை வைத்து காங்கிரஸ் கட்சி போட்டிருந்த கணக்குகள் சிக்கலாகின. இந்நிலையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. அடுத்த நொடியே தேசிய அளவில் தலைப்பு செய்தியாக மாறிவிட்டது.

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த உத்தரவு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கொண்டாடி வருகின்றனர். குஜராத்தில் மறுக்கப்பட்ட நீதியானது டெல்லியில் கிடைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குறிப்பிடுகின்றனர். கடைசி நம்பிக்கையாக உச்ச நீதிமன்றம் இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகளும் கூறத் தொடங்கியுள்ளனர். இவர்கள் நீதிமன்ற உத்தரவை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா கூட்டணி செம ஹேப்பி

நாடாளுமன்றத்தில் மீண்டும் நுழையும் போது அதானிக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை யார் கொடுத்தது? என்ற கேள்வியை ராகுல் காந்தி மீண்டும் எழுப்புவார். மோடியும், அதானியும் விமானத்தில் பயணிக்கும் புகைப்படம் மீண்டும் வைரலாகும் என்கின்றனர். மும்பையில் வரும் 30ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், ராகுல் காந்தி தீர்ப்பு விவகாரம் மிகுந்த உற்சாகம் அளித்திருக்கிறது.

மும்பையில் ஆலோசனை கூட்டம்

இதில் மிகவும் நம்பிக்கை உடன் சில முடிவுகளை எடுத்து, அடுத்தகட்ட அரசியல் பாய்ச்சலுக்கு தயாராக முடியும். வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக 28 கட்சிகள் அடங்கிய பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ள எதிர்க்கட்சிகள், அடுத்ததாக ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யவுள்ளனர்.

ராகுல் பிரதமர் வேட்பாளர்?

அதன்பிறகு பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வர். இதில் நீதிமன்ற தீர்ப்பால் ராகுல் காந்திக்கு வாய்ப்பில்லாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் ஒரே ஒரு உத்தரவு பல்வேறு அரசியல் கணக்குகளை தவிடுபொடியாக்கி உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியையும் ஒரு வேட்பாளராக முன்னிறுத்த அதிக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.