`மாமன்னன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியதை தொடர்ந்து தற்போது `Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தேர்தல் அரசியலில், குறிப்பாக தனித்தொகுதியில் இருக்கும் சாதிய அரசியலைப் பற்றிப் பேசும் இப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, உதயநிதியின் நடிப்பு, மாரி செல்வராஜ் இயக்கம், ரஹ்மானின் இசை என அனைத்தையும் ரசிகர்கள் பாராட்டினர்.
இந்நிலையில் சமீபத்தில் இதில் சாதிய ஆணவம் கொண்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் பகத் கதாபாத்திரத்தைப் பல ஹீரோயிசப் பாடல்களுடன் எடிட் செய்து கொண்டாடும் விதமாகச் சிலர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ‘தேவர் மகன்’ படத்திற்கும் இப்படத்திற்கும் இருக்கும் தொடர்புகள் பற்றிய மீம்களும் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து பேசியுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, சமூக வலைதளங்களிலிருந்து இத்தகைய பதிவுகளையும் வீடியோக்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் பகத் பாசிலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபற்றிப் பேசியுள்ள கிருஷ்ணசாமி, “‘மாமன்னன்’ திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், சம்பந்தமில்லாமல் 1992-ல் வெளிவந்த ‘தேவர் மகன்’ படத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார். அதில் இருக்கும் கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’ படத்திலும் வந்திருக்கிறது என்று கூறினார்.
இது முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் கொண்டது. படம் எடுக்க எத்தனையோ கதைக்கருக்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் சாதியை வைத்துப் படம் எடுப்பது அவசியமில்லாதது. மாரி செல்வராஜ், நல்ல கதைகளை வைத்துப் படமெடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், பகத் பாசில் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறித்துப் பேசியவர், “பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். ‘மாமன்னன்’ படத்தில் அவர் நடித்த ரத்னவேல் பாத்திரத்தைத் தவறான நோக்கத்துடன் சாதியப் பிரிவினைகளைத் தூண்டும் வகையில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுவது தவறானது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பகத் பாசிலின் ரத்னவேல் பாத்திரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் சாதிய வேறுபாடுகளையும் மோதல்களையும் உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மீம்ஸ், வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க, பகத் பாசிலே முன்வந்து உரிய நடவடிக்கை வேண்டும். இல்லையென்றால் இது அவருக்குச் சட்ட ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்திவிடும். அவர் நல்ல நடிகர். இதுபோன்ற பிரச்னைகளில் அவர் மாட்டிக்கொள்ளக் கூடாது” என்று பகத் பாசிலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.