கொழும்பு, நம் நாட்டு மக்களுக்கு, ஆதார் அடையாள அட்டை வழங்குவதுபோல், இலங்கையிலும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியுதவியின் முதல் தவணையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
தற்போது அதில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில், நம் நாட்டில் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை போல், இலங்கையிலும், டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க, அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
அரசின் திட்ட பலன்கள், சேவைகள் உரியவர்களுக்கு நேரடியாக வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான தொழில்நுட்ப உதவியுடன், நிதியுதவியையும் மத்திய அரசு வழங்குகிறது.
இதன்படி முதல் தவணையாக, 45 கோடி ரூபாய்க்கான காசோலையை, அந்த நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கனகா ஹெராத்திடம், இலங்கைக்கான இந்தியத் துாதர் கோபால் பகலே நேற்று முன்தினம் வழங்கினார்.
நேற்று நடந்த, திட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்த தகவலை அறிவித்தார்.
இலங்கை மக்கள் அனைவருக்கும், தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்காக, கைரேகை, கண்விழி படலம், முழு முகம் உள்ளிட்ட உடல் அடையாளங்களுடன், வசிப்பிடம், வயது, பிறந்த தேதி, மொபைல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்துக்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறது. இதன் முதல் கட்டமாக, திட்ட மதிப்பீட்டில், 15 சதவீதம் தற்போது வழங்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்