குருகிராம், ஹரியானாவில் வன்முறை காரணமாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று, குருகிராமில் உள்ள மசூதிகளில் தொழுகை நடக்கவில்லை. கலவரம் நடந்த போது விடுப்பில் சென்ற, எஸ்.பி., அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள நுாஹ் மாவட்டத்தில் சமீபத்தில் வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேரணி நடத்தினர்.
அப்போது அவர்கள் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்கியது.
இதையடுத்து, பேரணியில் பங்கேற்றவர்கள் கோவில்களில் தஞ்சம் அடைந்தனர். இந்தக் கலவரம் அண்டை மாவட்ட மான குருகிராமுக்கும் பரவியது.
இரு மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையான நிலையில், குருகிராமில் மசூதி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வன்முறை காரணமாக பதற்றம் நீடித்து வருவதால், வெள்ளிக்கிழமையான நேற்று, குருகிராமில் உள்ள மசூதி களில் தொழுகை நடக்கவில்லை.
அதற்கு பதிலாக, தங்களது வீடுகளிலேயே முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.
நுாஹ் மாவட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே வன்முறை நடந்த போது, விடுப்பில் இருந்த அம்மாவட்ட எஸ்.பி., வருண் சிங்கலா பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
புதிய எஸ்.பி.,யாக நரேந்திர பிஜர்னியா நியமிக்கப்பட்டுள்ளார். பிவானி மாவட்ட எஸ்.பி., யாக வருண் சிங்கலா நியமிக்கப்பட்டு உள்ளார்.
குடிசைகள் இடிப்பு
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள், அசாமில் இருந்து இடம் பெயர்ந்து, ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தில் உள்ள டாரு என்ற இடத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடிசைகள் கட்டி, நான்கு ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வந்தனர். இந்நிலையில், மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையில் இவர்களுக்கும் பங்குள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக, நேற்று, 250க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடிசைகள் இடித்து தள்ளப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்