டெஹ்ரான், ஈரானில் இஸ்லாமிய பெண்கள் ‘ஹிஜாப்’ அணிவதற்காக தயாரிக்கப்பட்டு வரும் புதிய மசோதா அமலுக்கு வந்தால், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
போராட்டம்
மேற்காசிய நாடான ஈரானில், பெண்கள் தங்கள் தலையை சுற்றி, ‘ஹிஜாப்’ எனப்படும் துணியை அணிவதும், கழுத்து முதல் பாதம் வரை மறைக்க கூடிய முழு நீள ஆடை அணிவதும் கட்டாயமாக பின்பற்றப்படுகிறது.
இந்த ஒழுக்க விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, அறநெறி போலீசார் நாடு முழுதும் நியமிக்கப்பட்டனர். பொது இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்ட அவர்கள், விதிகளை மீறும் பெண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வந்தனர்.
கடந்த செப்டம்பரில், ஈரான் அறநெறி போலீசாரிடம் சிக்கிய மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால், அவர் இறந்த தாக கூறப்பட்டது.
இது, ஈரான் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதில், 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் ; ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஈரானிய பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை தவிர்த்தனர். இது அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.
இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அறநெறி போலீஸ் படையை அந்நாட்டு அரசு திரும்ப பெற்றது.
இந்நிலையில், ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணியும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, அறநெறி போலீசார் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தபடியாக, ஹிஜாப் அணிவதற்கான புதிய மசோதாவை அந்நாட்டு அரசு உருவாக்கி வருகிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் அரசின் பரிசீலனைக்காக, நீதித்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மசோதா, சட்டம் மற்றும் நீதித் துறையின் அங்கீகாரத்தை தொடர்ந்து, கவர்னர்கள் குழுவின் பார்வைக்கு ஓரிரு நாளில் வைக்கப்பட்ட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எச்சரிக்கை
அடுத்த இரண்டு மாதங்களில் மசோதா இறுதி செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால், ஹிஜாப் அணியாதவர்கள் மீது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் பாயும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரண்டு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை, புதிய மசோதாவால் அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
அபராத தொகையும், இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது–.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்