கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை: ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

வாரணாசி: கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மசூதியில் நேற்று தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.

உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னராட்சி காலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு கியான்வாபி மசூதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில், மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த சூழலில், கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடக் கோரி இந்துக்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா, கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான ஆய்வினை நடத்த உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மாநில உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து கியான்வாபி மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மசூதி நிர்வாகம் முன்வைத்த வாதத்தில், “கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரானது. தொல்லியல் துறை ஆய்வால் மசூதி சேதமடையும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “கியான்வாபி மசூதியின் எந்த பகுதியும் தோண்டப்படாது. அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தப்படும்” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், கியான்வாபி மசூதிக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி வழங்கினார். ஆய்வு தடை விதிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.

இதனிடையே இந்திய தொல்லியல் துறையை சேர்ந்த 64 நிபுணர்கள் நேற்று காலை 8 மணிக்கு கியான்வாபி மசூதியில் ஆய்வை தொடங்கினர். தொழுகைக்காக மதியம் 12 மணிக்கு ஆய்வு நிறுத்தப்பட்டது. பின்னர் மாலை 3 மணிக்கு மீண்டும் ஆய்வு தொடங்கி மாலை 5 மணி வரை நீடித்தது. தொல்லியல் துறை ஆய்வை பார்வையிட இந்துக்கள் தரப்பில் 7 பேருக்கும் முஸ்லிம்கள் தரப்பில் 9 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இந்துக்கள் தரப்பில் 7 பேர் சென்றனர். முஸ்லிம்கள் தரப்பில் யாரும் செல்லவில்லை.

ஆய்வு குறித்து தொல்லியல் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

கியான்வாபி மசூதியை 4 பகுதிகளாகப் பிரித்துள்ளோம். அனைத்துபகுதிகளிலும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆய்வு முழுவதும் கேமராக்களில் பதிவு செய்யப்படும். முதலில் சுவர்கள் ஸ்கேன் செய்யப்படும். அதன்பிறகு மற்ற பகுதிகளை ஸ்கேன் செய்வோம்.

மசூதியின் எந்த பகுதியையும் தோண்ட மாட்டோம். ஜிபிஆர் தொழில்நுட்பத்தில் ஆய்வு நடத்தப்படும். இதன்படி பூமிக்கு அடியில் ரேடியோ அலைகள் செலுத்தப்பட்டு அதன்மூலம் ஆய்வு நடத்தப்படும். சில பகுதிகளை கார்பன் டேட்டிங் மூலம் ஆய்வு செய்வோம். சுவரின் நிற மாற்றம், அஸ்திவாரம், மண் தொடர்பாகவும் ஆய்வு நடத்தப்படும். முழுமையாக ஆய்வு நடத்த 4 வாரங்கள் தேவை என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

இவ்வாறு தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொல்லியல் துறை ஆய்வை முன்னிட்டு கியான்வாபி மசூதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மசூதி வளாகத்தை சுற்றி ஒரு கி.மீ. தொலைவுக்கு வெளி நபர்கள் அனுமதிக்கப்படவில்லை. காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.