‘மக்கள் பாடகர்’ கத்தார் காலமானார்: சமூக வலைதளங்களில் இரங்கல்

ஹைதராபாத்: பிரபல மேடைப் பாடகரும் செயற்பாட்டாளருமான கத்தார் காலமானார். அவருக்கு வயது 77.

1949ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த கத்தாரின் இயற்பெயர் கும்மிடி விட்டல் ராவ். இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட கத்தார், 1980களில் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் கலாச்சாரப் பிரிவின் சார்பில் பல்வேறு கூட்டங்களில் பாடல்கள் பாடி கவனம் ஈர்த்தார். 1997ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சியில் அவரது முதுகெலும்பில் துப்பாக்கிக் குண்டு ஒன்று சிக்கிக் கொண்டது.

2010ஆம் ஆண்டு வரை நக்சல் இயக்கத்தில் செயல்பட்டு வந்தவ கத்தார், பின்னாட்களில் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். சுதந்திர போராட்டத்தின் தொடக்கத்தில் பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட கடார் கட்சியின் (Gadar party) மீதான ஈர்ப்பால் தன் பெயரை கத்தார் (Gaddar) என்று மாற்றிக் கொண்டார். தனி தெலங்கானா மாநிலத்துக்கான தனது ஆதரவை வலுவாக முன்வைத்த கத்தார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தனது பாடல்களின் மூலம் மக்கள் பிரச்சினைகளை அழுத்தமாக பதிவு செய்ததால் ‘மக்கள் பாடகர்’ என்று அழைக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கத்தார் இன்று (ஜூலை 06) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.