'மாமன்னன்' ரத்னவேல் கேரக்டரை கொண்டாடுவதா..? கொந்தளித்த டாக்டர் கிருஷ்ணசாமி.. பகத் பாசிலுக்கும் அட்வைஸ்

சென்னை:
‘மாமன்னன்’ திரைப்படத்தையும், அதன் இயக்குநர் மாரி செல்வராஜையும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல, அந்த திரைப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் ஏற்று நடித்த ரத்னவேல் கதாபாத்திரம் கொண்டாடப்படுவதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ‘மாமன்னன்’. கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடே ‘மாமன்னன்’ என்று மாரி செல்வராஜ் ஏற்கனவே கூறி இருந்ததால், இந்த திரைப்படத்திற்கு ‘ஹைப்’ எகிறியது. அந்த வகையில், இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியையும், வசூலையும் பெற்று தந்தது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவரை ஜாதி இழிவு எவ்வாறு துரத்துகிறது, அதிலிருந்து வெளிவர அவரது குடும்பமே எத்தனை பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் ஒன்லைன். இதில் சட்டமன்ற உறுப்பினராக வடிவேலுவும், அவரது மகனாக உதயநிதியும் நடித்திருப்பார்கள். அவர்களை ஒடுக்க நினைக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் நடித்திருப்பார்.

தலைகீழாக மாறிய சீன்கள்:
இதனிடையே, திரைப்படம் வெளியான நாள் முதலாக சமூக வலைதளங்களில் உதயநிதியின் மாஸ் சீன்களை வைத்து ஒருதரப்பினர் ‘வைப்’ செய்து வந்தனர். ஆனால் தற்போது அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஃபகத் பாசில் நடித்த வில்லன் கதாபாத்திரமான ரத்னவேலை சில சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். அவரது சீன்களை எடிட் செய்து கெத்தான பாடல்களை போட்டு ஃபயர் விட்டு வருகிறார்கள். மேலும், ரத்னவேல் கதாபாத்திரத்தை தேவராகவும், கவுண்டராகவும், வன்னியராகவும் அந்தந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் காண்பித்து வருகின்றனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து:
இந்நிலையில்தான், இந்த விவகாரம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “மாமன்னன் திரைப்படம் வெளியாகும் முன்பே எந்த விதத்திலும் பழைய சாதி கலவரங்களையும், கசப்பான விஷயங்களையும் இந்த திரைப்படம் கிளறிவிடக் கூடாது என நான் கூறியிருந்தேன். ஒருகாலத்தில் இரு சமூக மக்களிடையே பயங்கர சாதி கலவரம் ஏற்பட்டதும், அதனால் பெரும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டதும் உண்மைதான். ஆனால் இப்போது அந்த ரணங்கள் ஆறி வருகின்றன.

ரத்னவேலை கொண்டாடுவதா?
இந்த சமயத்தில் மீண்டும் அந்த புண்ணை கிளறுவது போல திரைப்படங்கள் எடுப்பது சமூக அக்கறையில் அல்ல. முழுக்க முழுக்க வியாபார நோக்கத்திற்காகவே. இப்போது என்ன நடக்கிறது? மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக வரும் ஃபகத் பாசிலின் ரத்னவேலுவின் கதாபாத்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள், ரத்னவேலை தங்கள் சாதிக்காரர்கள் போல சித்தரிக்கிறார்கள். மேலும், நாங்கள் அப்படித்தான் அடாவடி செய்வோம்.. அப்படித்தான் மற்றவர்களை ஒடுக்குவோம் என்பது போல ரத்னவேல் கதாபாத்திரத்தை முன்னுதாரணமாக பார்க்கிறார்கள்.

“முதல்வருக்கு ஆங்கிலமும் தெரியாது.. இந்தியும் தெரியாது”.. என்ன பண்றது? அண்ணாமலை கிண்டல்

ஃபகத் பாசிலுக்கு அட்வைஸ்:
இதுதான் சாதிய மோதலை துண்டக்கூடிய விஷயம் ஆகும். ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடும் எல்லா ஜாதி இளைஞர்களுக்கும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். காலம் மாறிவிட்டது. இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் யாரும் யாரையும் அடக்கவோ ஒடுக்கவோ முடியாது. அதற்கு சட்டமும் இடம் தராது. எனவே ஜாதி வேறுபாடுகளை மறந்து அனைவரும் மனிதர்கள் என்ற மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அதேபோல, நடிகர் ஃபகத் பாசிலும் தனது கதாபாத்திரம் ஜாதி மோதலுக்கு காரணமாக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னை வைத்து ஜாதி மோதலை உருவாக்கும் வீடியோக்களோ, மீம்ஸ்களோ வருவதை தடுக்க அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.