அண்ணாமலை மனுவை கீழே போட்டாரா..? "செவுலை திருப்பிடுவேன்".. திடீரென ஆவேசமான எச். ராஜா

மதுரை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஒரு கேள்வியை கேட்டதுமே எச். ராஜா ஆவேசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கியுள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், அண்ணாமலையுடன் பல இடங்களில் பாதயாத்திரை சென்ற பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு ஆகியோர் விமர்சித்திருக்கிறார்களே..” என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து எச். ராஜா கூறியதாவது:

ஒரு விஷயத்தை தெளிவாக கூறிக்கொள்கிறேன். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏதாவது சொன்னால் நான் பதில் அளிப்பேன். அதிமுகவின் தலைவர் அவர்தான். அவர் இந்தக் கூட்டணியை ஏற்றிருக்கிறார். எனவே அவர் ஏதாவது முரண்பட்ட கருத்துகளை கூறினால் நான் பதில் கூறுவேன். மற்றவர்கள் பேசுவதற்கு எல்லாம் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக இருக்கிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஒரு நிருபர், “பாதயாத்திரையின் போது மக்கள் கொடுக்கும் மனுக்களை அண்ணாமலை தெருவில் வீசி செல்கிறார் என ஒரு தகவல் வருகிறதே..” எனக் கேள்வியெழுப்பினார். இதை கேட்டதும் ஆவேசமான எச். ராஜா, “இதை சொன்னானோ அந்த பயலை இங்க கூட்டிட்டு வாங்க.. செவுலு திரும்ப கொடுப்பேன். ஏனென்றால் நான் 4 நாள் அவருடன் பாதயாத்திரை சென்றேன். மனுக்களை தனது செக்யூரிட்டியிடம் கொடுத்து புகார் பெட்டியில் அண்ணாமலை போட சொன்னார். ஆகவே இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க” என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.