இஸ்லாமாபாத்: அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், 1996-ல் தெஹ்ரீக் இ–இன்சாப் (பிடிஐ) கட்சியைத் தொடங்கி, 2018 பொதுத் தேர்தலில் வென்று, பாகிஸ்தானின் 22-வது பிரதமராகப் பதவியேற்றார். கூட்டணிக் கட்சிகள் விலகியதால், 2022 ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பின்னர், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இம்ரான் கானின் மனைவி பும்ரா பீவிக்குச் சொந்தமான காதிர் அறக்கட்டளையின் ரூ.5,000 கோடி ஊழல் வழக்குத் தொடர்பாக கடந்த மே 9-ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, அரசு கரு வூலப் பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பான ஊழல் வழக்கு, இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி ஹிமாயூன் திலாவர் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்ப தாவது: 2020-21-ம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தில் இம்ரான் கான் சமர்ப்பித்த சொத்து விவரங்களில், அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் தொடர்பான விவரங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. அவரது சட்டவிரோத நடவடிக்கை, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கிறேன். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அபராதத்தை செலுத்தவில்லை என்றால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, லாகூரில் உள்ள வீட்டில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறும்போது, “பாகிஸ்தான் அரசமைப்பு சாசனம் பிரிவு 63(1)(எச்)-ன்படி, குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர், உடனடியாக தகுதி இழப்பர். சிறை தண்டனை நிறைவடைந்த பிறகு 5 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படும்” என்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, இம் ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது கட்சித் தலைவர் பதவியும் பறிக்கப்பட வாய்ப்புள்ளது.
கைது செய்யப்படுவதற்கு முன் இம்ரான் கான் வெளியிட்ட வீடியோவில், “என்னை கைது செய்வார்கள் என்று முன்கூட்டியே தெரியும். லண்டனில் தீட்டப்படும் திட்டம், பாகிஸ்தானில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. பிடிஐ கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். மக்களின் சுதந்திரத்துக்காக நான் போராடு கிறேன். அடிமைகளாக இருக்காமல், அறவழியில் நீதிக்காகப் போராடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அண்ணன் நவாஸ் ஷெரீப் லண்டனில் வசிக்கிறார். இதை இம்ரான் கான் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். பிடிஐ கட்சி வட்டாரங்கள் கூறும்போது, “விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் வோம்” என்று தெரிவித்தன.
வழக்கு பின்னணி: 2019-ல் பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், சவுதி அரேபியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார். அதன் மதிப்பு ரூ.16 கோடி.
பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி, அந்நாட்டு பிரதமர், அதிபர் ஆகியோர் வெளிநாட்டுப் பயணங்களின்போது பெறும் பரிசுப் பொருட்களை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆனால், சவுதி இளவரசர் வழங்கிய கைக்கடிகாரத்தை இம்ரான்கான் கருவூலத்தில் ஒப்படைக்காமல், தனது மனைவி பும்ரா பீவியிடம் அளித்தார். அவர் அதை நண்பர் மூலம் விற்பனை செய்துள்ளார். இதேபோல, வெளிநாட்டுப் பயணங்களின்போது பரிசாகக் கிடைத்த பேனா, ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை இம்ரான் கான் முறைகேடாக விற்பனை செய்துள்ளார்.
இந்த விவகாரங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிச் சத்துக்கு வந்து, இம்ரான் கானிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. அப்போது, அரசுக் கருவூலத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ரூ.2.15 கோடிக்கு பரிசுப் பொருட்களை வாங்கி, ரூ.5.8 கோடிக்கு விற்பனை செய்ததாக அவர் விளக்கம் அளித்தார். ஆனால், அவர் பரிசுப் பொருட்களை ரூ.20 கோடிக்கு விற்பனை செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இம்ரான் கான் தாக்கல் செய்த சொத்து விவரப் பட்டியலில், அரசுக் கருவூலப் பரிசுப் பொருட்கள் குறித்த தகவல்களை மறைத்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில்தான் அவருக்கு தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.