கலபுரகி : ”ஆகஸ்ட் 27க்குள், பதிவு செய்து கொண்டவர்களுக்கும், 200 யூனிட் இலவச மின்சார சலுகை கிடைக்கும்,” என, மின் துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.
கலபுரகியில், ‘கிரஹ ஜோதி’ திட்டத்தை, அமைச்சர் ஜார்ஜ் நேற்று துவக்கி வைத்தார்.
இதில், அவர்
பேசியதாவது:
ஜூலை 27 வரை, பதிவு செய்து கொண்டவர்களுக்கு, ‘கிரஹ ஜோதி’ திட்டத்தின் சலுகை கிடைக்கிறது.
திட்டத்துக்கு பதிவு செய்து கொள்ள, எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 27க்குள் பதிவு செய்து கொண்டவர்களுக்கும், திட்டத்தின் சலுகை கிடைக்கும்.
நாட்டில் இது ஒரு புரட்சிகரமான திட்டமாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட, விலை உயர்வு, பண வீக்கத்தால் அவதிப்படும் மக்களுக்கு, கிரஹ ஜோதி திட்டம் சஞ்சீவினி போன்றதாகும். ஏழைகளுக்கு பணம் கிடைத்தால், அதை அவர்கள் வீட்டில் வைத்திருப்பதில்லை.
அன்றாட தேவைக்கு பயன்படுத்துவர். கிரஹ ஜோதி திட்டத்தை, இலவச திட்டம் என்பதை விட, பொருளாதார முன்னேற்ற திட்டம் என, கருதலாம்.
கடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ.,வினர், சதி செய்து காங்கிரசில் இருந்தவரை ஈர்த்து, தேர்தலில் நிறுத்தி, மல்லிகார்ஜுன கார்கேவை தோற்கடித்தனர். இம்முறை லோக்சபா தேர்தலில், மாநில மக்கள் தக்க பதிலடி கொடுப்பர். கலபுரகியில் காங்கிரஸ் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர்பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்