Citroen C3 Aircross – சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி வேரியண்ட் வசதிகள்

சிட்ரோன் நிறுவனத்தின் C எஸ்யூவி பிரிவில் வரவிருக்கும் புதிய C3 ஏர்கிராஸ் காரில் ஒற்றை மேக்ஸ் வேரியண்ட் மட்டும் விற்பனைக்கு 5 மற்றும் 5+2 என இரு விதமான ஆப்ஷனில் மொத்தமாக 10 விதமான நிறங்கள் மற்றும் இரண்டு விதமான இன்டிரியர் நிறங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சி3 ஏர்கிராஸ் ஆனது முன்பதிவு செப்டம்பரில் துவங்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் டெலிவரி வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Citroen C3 Aircross SUV

110 PS பவரை 5500rpm-லும் மற்றும் 190Nm டார்க் 1750rpm-ல் வழங்குகின்ற 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் காராகவும் 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும்.

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மைலேஜ் 18.5 Kmpl என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

C3 ஏர்கிராஸ் காரின் பரிமாணங்கள் 4300mm நீளம், 1796mm அகலம் மற்றும் 1654mm உயரம் கொண்டிருக்கின்றது. மற்ற போட்டியாளர்களை விட கூடுதலான வீல்பேஸ் 2671mm கொண்டிருப்பதுடன், வேறு எந்த போட்டியாளர்களிடமும் இல்லாத 200mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாகும்.

இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள 5+2 இருக்கை முறையில் உள்ள மூன்றாவது வரிசை இருக்கையை மிக சுலபமாக 10 வினாடிகளுக்குள் நீக்கிக் கொள்ளலாம் என சிட்ரோன் உறுதிப்படுத்தியுள்ளது. 5 சீட்டர் பெற்ற காரின் பூட் கொள்ளளவு 444 லிட்டர் மற்றும் 5+2 சீட்டர் மாடலில் மூன்றாவது வரிசை இருக்கையை முழுமையாக நீக்க முடியும் என்பதனால் அதிகபட்சமாக 511 லிட்டர் பெற்றிருக்கும்.

citroen c3 aircross dashboard

சி3 ஏர்கிராஸ் காரில் வெள்ளை, கிரே, பிளாட்டினம் கிரே மற்றும் காஸ்மிக் ப்ளூ என 4 ஒற்றை நிறங்களுடன் கூடுதலாக 6 டூயல் நிறங்கள் வெள்ளை நிறத்துடன் கிரே கூறை, வெள்ளை நிறத்துடன் நீல நிற கூறை, கிரே நிறத்துடன் வெள்ளை கூறை, கிரே உடன் ப்ளூ ரூஃப், பிளாட்டினம் கிரே உடன் வெள்ளை ரூஃப் மற்றும் நீல நிறத்துடன் வெள்ளை கூறை ஆகியவற்றை பெற்று கிரே மற்றும் பிரான்ஸ் என இரண்டு விதமான இன்டிரியர் டேஸ்போர்ட் நிறத்தை பெற்றுள்ளது.

Citroen C3 Aircross Max Variant:

 • ஹாலஜென் ஹெட்லேம்ப்
 • எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள்
 • 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்
 • மூடுபனி விளக்குகள்
 • 5+2 ஆப்ஷனில் நீக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள்
 • 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
 • 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
 • வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ
 • 4 ஸ்பீக்கர்கள் + 2 ட்வீட்டர்கள்
 • ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்ட ஆடியோ, தொலைபேசி கட்டுப்பாடுகள்
 • இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம்
 • ஹீட்டருடன் கூடிய மேனுவல் ஏசி
 • கூரையில் பொருத்தப்பட்ட பின்புற ஏசி வென்ட்கள் (5+2 இருக்கை மட்டும்)
 • ஐந்து ஃபாஸ்ட்-சார்ஜர் போர்ட்
 • நான்கு பவர் விண்டோஸ்
 • மின்சாரம் சரிசெய்யக்கூடிய இறக்கை கண்ணாடிகள்
 • பின்புற டிஃபோகர், வைப்பர் மற்றும் வாஷர்
 • பின்புற மைய ஆர்ம் ரெஸ்ட் (5 இருக்கை மட்டும்)
 • மேனுவலாக ஓட்டுநர் இருக்கை உயரம் சரி செய்யலாம்

பொதுவாக பாதுகாப்பு அம்சங்கள் காரில் இரட்டை ஏர்பேக் (அக்டோபர் 1 முதல் 6 ஏர்பேக் கட்டாயம்), ஏபிஎஸ், ஈபிடி, ஈஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு ரிவர்ஸ் கேமரா மற்றும் சென்சார் உள்ளன.

c3 aircross 5 seater citroen c3 aircross seating

சி3 ஏர்கிராஸ் காரின் போட்டியாளர்கள்

சி பிரிவில் உள்ள போட்டியாளர்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

பொதுவாக, இங்கே இடம்பெற்றுள்ள சி3 ஏர் கிராஸ் போட்டியாளர்கள் எல்இடி ஹெட்லை, சன்ரூஃப் உட்பட பல்வேறு நவீனத்துவமான வசதிகளை வழங்கி வருகின்ற நிலையில், பட்ஜெட் விலையில் அடிப்படையான அம்சங்கள் மட்டும் சேர்க்கப்பட்டடுள்ளதால் மிகவும் சவாலான விலையில் எதிர்பாரக்கலாம்.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஐந்து இருக்கை கொண்ட வேரியண்ட் ரூ.11 லட்சம் மற்றும் ஏழு இருக்கைகள் சுமார் ரூ. 13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலைக்குள் எதிர்பார்க்கலாம்.

அதிகப்படியான ஆடம்பர வசதிகள் சேர்க்கப்படாமல், வாடிக்கையாளர்கள் அடிப்படையாக விரும்பும் வசதிகள் மட்டும் சேர்க்கப்பட்ட பட்ஜெட் விலை எஸ்யூவி சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் நடுத்தர குடும்பங்களுக்கும் முதல் தலைமுறை கார் வாங்குபவர்களுக்கு ஏற்ற மாடலாகும்.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் கார் புகைப்படங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.