பெங்களூரு : ”நைஸ் சாலை ஊழல் தொடர்பான ஆவணங்களை, டில்லியில் வெளியிடுவேன்,” என, முன்னாள் முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.
கர்நாடகாவில், 1995ல், ‘நைஸ்’ எனப்படும், ‘நந்தி இன்ப்ராஸ்டிரக்சர் காரிடார் என்டர்பிரைசஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, பெங்களூரு – மைசூரு இடையே, இணைப்பு ஏற்படுத்தும் ஆறு வழிச் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை, ‘நைஸ் சாலை’ என அழைக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்காக பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. ஆனால், இந்த நிலம், சட்டவிரோதமாக தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, அவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளனர்.
சாலையும் தரமாக இல்லை. அரசுக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.
‘நைஸ்’ திட்டத்தில், முறைகேடு நடந்துள்ளதாக, அன்றிலிருந்தே தேவகவுடா, பல முறை குற்றம்சாட்டி வந்தார். இது குறித்து, ஆய்வு செய்ய, காங்., – ம.ஜ.த., கூட்டணி அரசில், ஜெயசந்திரா தலைமையில் கமிட்டி அமைத்தது.
கமிட்டியும் ஆய்வு செய்து சமீபத்தில் அறிக்கை அளித்திருந்தது. அறிக்கை வெளியிட்ட பின், அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது.
நைஸ் திட்டத்தின் முறைகேடு தொடர்பாக, முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் ஆவணங்கள் இருப்பதாக தெரிகிறது. இவற்றை அவர் வெளியிடவும் தயாராகி வருகிறார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
நைஸ் திட்டத்தில், விவசாயிகள் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்தனர். இது தொடர்பாக, அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வைத்துள்ளேன்.
விரைவில் டில்லியில் வெளியிடுவேன். பிரதமரிடம் கேள்வி எழுப்புவேன். விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இடமாற்ற மாபியா வழியாக, 1,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை திரட்டி உள்ளனர். ஒவ்வொரு பதவிக்கும், மூன்று, நான்கு பேருக்கு பணி உத்தரவு கடிதம் கொடுத்து உள்ளனர். இடமாற்றம் குறித்து பேசவே, அருவறுப்பாக இருக்கிறது.
நைஸ் திட்டம் தொடர்பாக, அறிக்கை அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயசந்திராவுக்கு, கொலை மிரட்டல் வந்துள்ளது. அவருக்கு மிரட்டல் விடுத்தது யார். இந்த விஷயத்தில், அரசு மவுனமாக இருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரசாமி எந்த வெடிகுண்டை வேண்டுமானாலும் வீசட்டும். இதற்கு நாங்கள் பணியமாட்டோம். மற்றவரை போன்று, என்னை மிரட்ட முடியாது. 1975லிருந்து இத்தகைய பல வெடிகுண்டுகளை நான் பார்த்துள்ளேன். இடமாற்றம் தொடர்பாக, ஆவணங்கள் இருந்தால் குமாரசாமி, லோக் ஆயுக்தாவில் ஒப்படைக்கட்டும்.
– சிவகுமார், துணை முதல்வர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்