சென்னை: நாட்டின் 6 குடியரசுத் தலைவர்கள், நோபல் விருதாளர்கள் என்று எண்ணற்ற மேதைகளை உருவாக்கியதன் மூலம் கற்றலின் புகலிடமாக சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது என்று சென்னையில் நடைபெற்ற 165-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். மேலாண்மை கல்வி படிப்பில் ‘கிரேட் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா இடையே உயர்கல்வியில் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டப் படிப்பை முடித்த விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி.செல்வம், பொருளாதார துறையில் ‘மத்திய அரசின் நிதி பகிர்வால் மாநிலங்களின் வளர்ச்சி, பொது செலவினம், வருவாயில் ஏற்படும் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டப் படிப்பை முடித்த முன்னாள் தலைமைச் செயலர் கே.சண்முகம் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்.
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ச.கவுரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் அவர்கள் பேசியதாவது:
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: நாகரிகம், கலாச்சாரத்தின் தொட்டிலாக தமிழகம் திகழ்கிறது. சங்க இலக்கியத்தின் செழுமையான மரபுகள் இந்தியாவின் விலைமதிப்பற்ற பாரம்பரியம் ஆகும். திருக்குறளில் பொதிந்துள்ள மகத்தான கருத்துகள் பல நூற்றாண்டுகளாக நம்மை வழிநடத்தி வருகின்றன. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் சுமார் 1.85 லட்சம் பேர் பயில்கின்றனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மாணவிகள். இன்று தங்கப் பதக்கம் பெற்ற 105 பேரில் 70 சதவீதம் பேர் மாணவிகள்.
1857-ல் தொடங்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்தின் 165 ஆண்டு பயணத்தில் எண்ணற்ற அறிஞர்கள், தலைவர்கள், தொலைநோக்கு பார்வையாளர்களை உருவாக்கி, கற்றலின் புகலிடமாக திகழ்கிறது.
எனது முன்னோடிகளான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் என 6 முன்னாள் குடியரசுத் தலைவர்கள், நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி, நோபல் பரிசு பெற்று அறிவியல் உலகுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய சர்.சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர் ஆகியோர் இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். அதிநவீன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், துறைகளுக்கு இடையேயான ஆய்வுகள், சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் இப்பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: உங்கள் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். அதை அடைய நம்பிக்கையுடன் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது நீங்கள் மட்டுமின்றி, உங்கள் குடும்பம், மாநிலம், நாடும் வளரும். 2047-ல் இந்தியாவும் வல்லரசாகும்.
முதல்வர் ஸ்டாலின்: நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி உள்ளிட்ட தலைசிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்கு உண்டு. பேரறிஞர் அண்ணாவும் இங்குதான் படித்தார். நானும் இதே பல்கலைக்கழகத்தை சார்ந்தவன்தான். நாட்டிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்த பட்டமளிப்பு விழா மூலம் மொத்தம் 1 லட்சத்து 4,416 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பாரதியார் அரங்கமான தர்பார் ஹால்: ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பால் ஹாலுக்கு ‘பாரதியார் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை நடந்த விழாவில், பெயர் பலகை, பாரதியார் படத்தை குடியரசுத் தலைவர் முர்மு திறந்து வைத்தார். முன்னதாக, அவரை ஆளுநர் ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், இளையராஜா, பாரதியாரின் பேரன் அர்ஜுன் பாரதி, பேராசிரியர் ஞானசம்பந்தன், பத்மஸ்ரீ விருதாளர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் பங்கேற்றனர்.