நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்காக விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில், என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, பா.ம.க-வினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

என்.எல்.சி நிறுவனத்துக்காக ஏற்கெனவே நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்காத நிலையில், மேலும் நிலங்களைக் கையகப்படுத்துவது அந்தப் பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்ல, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல், வடமாநிலத்தவருக்கு அங்கு வேலை வழங்கியிருப்பது தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25,000 குடும்பங்கள் தங்கள் நிலங்களை என்.எல்.சி நிறுவனத்துக்கு வழங்கியிருக்கின்றன. ஆனால், நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 862 பேருக்கு மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது, என்.எல்.சி. நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்க0ப்பட்டிருக்கிறது. 1990 முதல் 2012 வரையிலான காலக்கட்டத்தில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிக்கிறது. இதே காலக்கட்டத்தில் வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்கிற தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவதில் முறைகேடு எதுவும் நடந்ததா என்ற சந்தேகத்தை அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன. “என்.எல்.சி-க்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் வட இந்தியர்களுக்கு சொந்தமான நிலங்களே இல்லை. அப்படியிருக்கும்போது, வட இந்தியர்கள் எவ்வாறு நிலம் வழங்கியிருக்க முடியும்.. அவர்கள் நிலமே வழங்காத நிலையில், அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது எப்படி..” என்ற கேள்வியை அன்புமணி ராமதாஸ் எழுப்பியிருக்கிறார்.
என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய 23,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை என்கிற நிலையில், நிலம் வழங்காத வட இந்தியர்களுக்கு வேலை வழங்கியது எப்படி என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இது குறித்து என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. அதில், ‘வட மாநிலத்தவர் 28 பேருக்கு தவறாக வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்று வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது’ என்று என்.எல்.சி நிர்வாகம் கூறியிருக்கிறது.

“என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம், வீடு ஆகியவற்றை கொடுக்காதவர்களில் 28 பேருக்கு தவறாக வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்று வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. ‘என்.எல்.சி பார்சிங்சார் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் திட்டம்’ என்ற திட்டத்துக்கு அவர்கள் நிலங்களை வழங்கியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என்.எல்.சி-யில் வேலை வழங்கப்பட்டது” என்று என்.எல்.சி நிர்வாகம் கூறியிருக்கிறது.
அதாவது, “என்.எல்.சி., தேசிய அளவிலான ஒரு நிறுவனம். என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்குத்தான் பணி வழங்கப்பட்டிருக்கிறது. வேலை பெற்ற பட்டியலில் இருக்கும் 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள். ராஜஸ்தானில் பார்சிங்சார் சுரங்கங்கள், அனல் மின் நிலைய திட்டங்கள் செயல்படுகின்றன. அவற்றுக்காக அவர்கள் நிலங்களை வழங்கியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது” என்று என்.எல்.சி நிர்வாகம் கூறியிருக்கிறது.

என்.எல்.சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்திருக்கிறது. ஏற்கெனவே, நீண்டகாலமாக பல போராட்டங்களை நடத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில், என்.எல்.சி விரிவாக்கத்துக்காக மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையால் அந்தப் பகுதி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களின் கொந்தளிப்பைத் தணிக்க வேண்டுமென்றால், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலாக இருக்கிறது.