அடுத்த அதிரடி பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
‘மாமன்னன்’ படத்திற்கு முன்னரே, துருவ் விக்ரமின் படத்தை இயக்கி முடித்திருக்க வேண்டும். ஆனால், உதயநிதியின் விருப்பத்தால் ‘மாமன்னன்’ படத்திற்கு பின்னர், துருவின் படம் டேக் ஆஃப் ஆகிறது. ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பின் மீண்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ், விக்ரமின் மகன் துருவ் விக்ரமை இயக்குகிறார். இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை முடித்த கையோடு, துருவ் விக்ரம் படத்தைத்தான் மாரி செல்வராஜ் தொடங்குவதாக இருந்தார். அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார். அந்தச் சமயத்தில்தான் உதயநிதி கூப்பிட்டிருக்கிறார். அவர் துருவை வைத்துப் படம் பண்ணும் விஷயத்தைச் சொன்னதும், உதயநிதியே துருவிடம் பேசினார். ‘மாரி செல்வராஜின் படம்தான் சினிமாவில் தன் கடைசிப் படம். இதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடப்போகிறேன்’ என உதயநிதி சொன்னதும், துருவ் அதுவரை காத்திருப்பதாகச் சொல்லவும், ‘மாமன்னன்’ படத்தைத் தொடங்கினார் மாரி. மாமன்னன்’ படமும் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. இடையே தனது கனவுப் படைப்பான ‘வாழை’ படத்தையும் முடித்துவிட்டார் மாரி செல்வராஜ்.

இப்போது துருவ் படத்திற்கான நேரம் கூடிவந்துவிட்டது. மாரி செல்வராஜ் – துருவ் இணையும் படம், கபடி விளையாட்டு வீரர் மனத்தி கணேசனின் கதையாகும். இப்படத்திற்காக திருநெல்வேலியில் கபடி வீரர் ஒருவரிடம் சில வாரங்கள் முழுநேரப் பயிற்சி எடுத்துவந்தார் துருவ். இப்போது மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதற்காக திருநெல்வேலியில் அலுவலகம் ஒன்றையும் போட்டுக் கொடுத்துவிட்டார் பா.ரஞ்சித். அடுத்த மாதம் நெல்லைப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுவருகிறார்கள். ‘வாழை’ படத்தை ஒரே வீச்சில் முடித்துவிட்டு வருகிறார் மாரி. அதை முடித்துவிட்டு, தனுஷின் படத்திற்கு வருகிறார் அவர்.