இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு-காஷ்மீர் எந்த நாட்டுடன் இணையும் என்ற கேள்வி எழுந்தபோது, ஜம்மு – காஷ்மீர் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டுமென அங்கிருந்த கடைசி மகாராஜா ஹரி சிங் விரும்பினார். அப்போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்து, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், பா.ஜ.க-வுக்குப் பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்பது நீண்டகால அரசியல் செயல்திட்டம்.

அதை நிறைவேற்றுவோம் என பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தது, தேர்தலிலும் வென்றது. அதைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மோடி தலைமையில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தவுடன், அதே ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ நீக்கியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.
ஐந்து நீதிபதிகள்கொண்ட அமர்வால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்குகள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்துவருகின்றன. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், காஷ்மீரில் புதிய அமைதி, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை அதிகரித்திருப்பதாக பா.ஜ.க தரப்பு விளம்பரப்படுத்திவருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத், “அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள், ஜம்மு காஷ்மீரின் நிலப்பரப்பு, ஜம்மு-காஷ்மீரின் வரலாறு, புவியியல் பற்றிய அறிவில்லாதவர்கள். பிரிவு 370 நீக்கம் என்பது குறிப்பிட்ட பகுதி அல்லது மதத்துக்காகக் கொண்டுவரப்பட்டதல்ல. இந்த நடவடிக்கை, அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. எனவே, இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின்மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.