81 கர்ப்பிணிகளுக்கு HIV தொற்று… மீரட் அரசு மருத்துவமனையில் திக் திக்… காரணம் தெரியாமல் தவிக்கும் மருத்துவர்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளுக்கு எப்படி தொற்று வந்தது என்றே தெரியவில்லை. மருத்துவ ரீதியாகவும் என்ன காரணம் எனக் கண்டறிய முடியவில்லை.

உ.பியில் பெரும் அதிர்ச்சி

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் மீரட் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையின் பழைய பதிவுகளை ஆராய்ந்ததில் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. 2022 – 2023 காலகட்டத்தில் 33 கர்ப்பிணிகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கும் முன்பு 35 கர்ப்பிணிகள் என பல்வேறு சமயங்களில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஹெச்.ஐ.வி

சரியாக கணக்கு போட்டு பார்த்தால் 16 மாதங்களில் 81 கர்ப்பிணி பெண்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டு அதில் 35 பேருக்கு பிரசவம் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் மீரட் லாலா லஜபதி ராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆண்டி ரெட்ரோவைரல் தெரபி மையத்தில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதெப்படி ஒரே அரசு மருத்துவமனையில் இத்தனை கர்ப்பிணிகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று கண்டறியப்படுகிறது? என்ற கேள்வி பலரையும் பாடாய்படுத்தி வருகிறது.

உரிய சிகிச்சை

இவர்களின் குழந்தைகளின் அனைத்தும் நலமுடன் இருக்கின்றன. 18 மாதங்கள் கழித்த பின்னரே ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்ய முடியும் என்பதால் அனைவரையும் தொடர்ந்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தாய்மார்களுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் இல்லை. இருப்பினும் போதிய ஊட்டச்சத்தை உறுதி செய்யவும், பின் விளைவுகளை தடுக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பரவியதற்கான காரணம்

இந்த சூழலில் கர்ப்பிணி பெண்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று எப்படி ஏற்பட்டது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. இதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரிவான விசாரணையில் நோய்த்தொற்று எங்கிருந்து வந்திருக்கும் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச்.ஐ.வி எப்படி பரவுகிறது?

ஹெச்.ஐ.வியை பொறுத்தவரை அந்த தொற்று பாதித்த நபரின் ரத்தத்தை பிறருக்கு செலுத்துவதன் மூலம் பரவி விடும். இல்லையெனில் அந்த பாதிப்பிற்கு ஆளான நபருடன் உடலுறவு கொள்வதாலும், அவருடன் மருந்துகளை பகிர்ந்து கொள்வதன் மூலமும், அதே ஊசி மூலம் டாட்டூக்கள் குத்துவதன் மூலம் ரத்தத்தில் கலந்து பரவும். ஹெச்.ஐ.வி தாயில் இருந்து குழந்தைக்கு பரவ வாய்ப்புள்ளது. அதேசமயம் இதை தடுக்கவும் முடியும் எனக் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.