குவாலியர்: “மத்திய பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் இருந்து சிவிங்கி புலிகளை இடம் மாற்றும் திட்டம் எதுவும் இல்லை,” என மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருந்த சிவிங்கி புலிகள் பல ஆண்டு களுக்கு முன் முற்றிலும் அழிந்தன.
அவற்றை மீண்டும் வளர்க்கும் திட்டத்தை முன்னெடுத்த மத்திய அரசு, தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கி புலிகளையும், தென் ஆப்ரிக்காவில் இருந்து, 12 சிவிங்கி புலிகளையும் இடமாற்றம் செய்தது.
இவை அனைத்தும், மத்திய பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன.
இதற்கிடையே, பெண் சிவிங்கி புலி ஜுவாலா, கடந்த மார்ச்சில் நான்கு குட்டிகளை ஈன்றது. இதையடுத்து, மொத்தமாக 24 சிவிங்கி புலிகள் தேசிய பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன.
![]() |
கடந்த ஐந்து மாதங்களில், நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மூன்று குட்டிகள் உட்பட, ஒன்பது சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சிவிங்கி புலிகளை இடமாற்றம் செய்ய தயங்குவது ஏன்’ என, மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் நேற்று கூறியதாவது:
சிவிங்கி புலிகள் இறப்பு குறித்து தென் ஆப்ரிக்க கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.
எஞ்சியுள்ள சிவிங்கி புலிகளை காப்பாற்ற இங்குள்ள கால்நடை டாக்டர்கள், பூங்கா ஊழியர்கள் உள்ளிட்டோர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
பூங்காவில் நிலவும் வானிலை, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். ஒவ்வொரு சிவிங்கி புலி மீதும் அக்கறை வைத்துள்ளோம்.
வெளிநாடுகளில் இருந்து சிவிங்கி புலிகளை இடமாற்றம் செய்வதை, ஆண்டுதோறும் தொடர மத்திய அரசு விரும்புகிறது.
இது முதன்முறையாக இடமாற்றம் செய்யப்பட்ட சிவிங்கி புலிகள் என்பதால், பராமரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனாலும், சிவிங்கி புலிகளை வேறு இடத்துக்கு மாற்றும் திட்டம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்