ஜோத்பூர் : பாகிஸ்தானைச் சேர்ந்த பெண், இந்தியாவுக்கு வருவதற்கு விசா கிடைக்காததால், ‘ஆன்லைன்’ வாயிலாக திருமணம் செய்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர், அர்பாஸ் கான். ஆடிட்டராக உள்ள இவரது உறவினர்கள் சிலர், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வசிக்கின்றனர்.
இவர்கள், கராச்சியைச் சேர்ந்த அமீனா என்ற பெண்ணை, அர்பாஸ் கானுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டனர். இது குறித்து அர்பாஸ் கானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்தனர்.
இதையடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன், அர்பாஸ் கானுக்கும், அமீனாவுக்கும் ஜோத்பூரில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால், அமீனா இந்தியா வருவதற்கு விசா பெறுவதில் சட்ட சிக்கல்கள் இருந்தன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் தற்போது கசப்புணர்வு உள்ளதால், விசா எளிதில் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஆன்லைன் வாயிலாக திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சமீபத்தில் ஜோத்பூரில், அர்பாஸ் கான் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் குழுமியிருந்தனர்.
அதுபோல், கராச்சியில், அமீனாவின் குடும்பத்தினர் பங்கேற்றனர். ஜோத்பூர் ஹாஜி, இஸ்லாமிய முறைப்படி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
விரைவில் விசா கிடைத்து, தன் மனைவி ஜோத்பூருக்கு வருவார் என, அர்பாஸ் கான் காத்திருக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement