மதுரை: இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம்தோறும் மூவர்ணக் கொடி என்ற திட்டத்தில் அஞ்சலகங்களில் ரூ.25க்கு தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. அதனையொட்டி நேற்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அஞ்சல்துறையினர் ரூ.25க்கு தேசியக்கொடியை விற்பனை செய்தனர்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இல்லங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தேசியக் கொடி விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து மதுரை அஞ்சல் கோட்டத்தின் சார்பில் இல்லம் தோறும் மூவண்ணக்கொடி என்ற திட்டத்தில் தேசியக்கொடி ரூ. 25க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனையொட்டி நேற்று மதுரையிலுள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அஞ்சல்துறையினர் ரூ.25க்கு தேசியக் கொடியை விற்பனை செய்தனர். இதனை கல்லூரி மாணவியர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வமுடன் விலை கொடுத்து வாங்கிச்சென்றனர்.
இதுதொடர்பாக, மதுரை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் கூறுகையில், “பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள எந்த ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் சென்று வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் வாங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே இ போஸ்ட் மூலம் ஆர்டர் செய்யும்போது கொடிகள் போஸ்ட்மேன்கள் மூலம் வீடுகளுக்கே வந்து கொடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள 87 அஞ்சல் நிலையங்கள் மட்டுமின்றி மதுரை கோட்டத்திற்க்குட்பட்ட 243 கிளை அஞ்சல் நிலையங்களிலும் கொடிகள் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றார்.