லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது. அடுத்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிஎஸ்டிபி) 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மாநிலத்தின் ஜிடிபி 20 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 5-6 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் மற்றும் ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்துள்ளன.
பொருளாதார வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான முக்கிய துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான சலுகைகளை அளிப்பதிலும், புதிய கொள்கை வகுப்பதிலும் அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
அரசின் நடவடிக்கைகள் விவசாயிகளின் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே, ஒவ்வொரு ஆண்டும் ரூ.19,000 கோடிமதிப்பிலான விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
96 லட்சம் நிறுவனங்களை உள்ளடக்கிய உ.பி.யின் எம்எஸ்எம்இ துறை மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த அளவில் ரூ.86,000 கோடியாக இருந்த ஏற்றுமதியை தற்போது ரூ.1.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.