நாகர்கோவில்: குமரி வனப்பகுதியான பேச்சிப்பாறை, சிற்றாறு, பத்துகாணி பகுதியில் மலைவாழ் மக்களை அச்சுறுத்திய புலி நேற்று மாலை பிடிபட்டது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்தனர்.
பேச்சிப்பாறை, சிற்றாறு சிலோன் காலனியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு மாதமாக புலியின் நடமாட்டம் இருந்தது. அங்குள்ள ஆடு மற்றும் கால்நடைகளை புலி வேட்டையாடியது. அடுத்தடுத்து ஆடு, மாடுகளை கடித்துக் கொன்றதால் அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் அச்சம் அடைந்தனர். புலியை பிடிக்க இரு கூண்டுகள் அமைக்கப்பட்டது. மேலும் புலியை பிடிக்கும் பயிற்சி பெற்ற எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டிரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை. இதனால் புலியை தேடுதல் வேட்டையை எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் கைவிட்டு திரும்பி சென்றனர்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு பத்துகாணி குற்றியாறு அருகே ஒரு நூறாம்வயல் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை புலி கடித்து குதறியது. இதனால் புலியின் நடமாட்டம் மீண்டும் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் குமரி மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையில் வனக்குழுவினர் பத்துகாணி பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆடுகளை இழந்த பழங்குடியினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இரு வாரங்களாக புலி தொந்தரவு இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் புலியின் தொந்தரவு தொடங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
புலியை பிடிக்க முதுமலை காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற பழங்குடியினரும், எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும் மீண்டும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் நேற்று முன்தினத்தில் இருந்து ஈடுபட்டு வந்தனர். குமரி மாவட்ட வன ஊழியர்களும் இணைந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2 கூண்டுகள் அமைக்கப்பட்ட நிலையில் பத்துகாணி பகுதியில் மேலும் 3 கூண்டுகளை அமைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டன.
மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டது. இந்நிலையில் பத்துகாணி கல்லறை வயல் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள பாறை இடுக்கில் நேற்று மாலை புலி பதுங்கி இருந்தது. அதை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட புலி 12 வயதான ஆண் புலியாகும். பின்னர் அந்த புலியை கூண்டில் அடைத்து பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். புலியை வனத்துறையின் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மாவட்ட வன அதிகாரி இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் இரவு வண்டலூர் வன உயிரின பூங்காவிற்கு புலி கொண்டு செல்லப்பட்டது.