புதுடெல்லி: டெல்லி அரசு உயர் அதிகாரிகளை கட்டுப்படுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த மே 19-ம் தேதி பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசு (திருத்த) மசோதா மக்களவையில் கடந்த 3-ம் தேதி நிறைவேறியது. இது டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் செய்யும் அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்குகிறது.
இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து பேசினர். 6 மணி நேர விவாதத்துக்குப் பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. மாநிலங்களவையில் காலியிடங்கள் போக இப்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை 238 ஆக உள்ளது. இதில் 233 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 102 வாக்குகளும் பதிவானது. இதையடுத்து, 29 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா 9 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (90) உடல்நலக்குறைவு காரணமாக இந்த கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. எனினும், டெல்லி மசோதா மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று சக்கர நாற்காலியில் அவைக்கு வந்திருந்தார். டெல்லி மசோதா மீது நடந்த வாக்கெடுப்பில் அதற்கு எதிராக அவர் வாக்களித்தார்.