"செந்தில் பாலாஜி முகத்தை பார்க்கும் பாக்கியம் நேற்றுதான் கிடைத்தது".. எச். ராஜா கிண்டல்..

சென்னை:
“இத்தனை நாள் திமுக அரசால் மறைத்து வைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் முகத்தை பார்க்கிற பாக்கியம் நேற்று தான் நமக்கு கிடைத்தது” என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கிண்டலாக கூறியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனை படலங்களுக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்ட போதிலும், உடல்நிலையை கருத்தில்கொண்டு சிறை மருத்துவமனையில் தான் செந்தில் பாலாஜி தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்த சூழலில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு அதிரடியாக புழல் சிறைக்கு சென்று செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தனர்.

அப்போது போலீஸ் ஜீப்பில் அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜியின் மிகவும் இறுகிப் போயிருந்தது. எப்போதும் க்ளீன் ஷேவுடன் காணப்படும் அவரது முகம், முதன்முதலாக தாடியுடன் வாடி இருந்தது. இதனைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடர்பாக எச். ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதலில் உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயம் தெரிய வேண்டியது அவசியம். அமலாக்கத்துறை மற்ற துறைகளை போல கிடையாது. உதாரணத்துக்கு போலீஸ் ஒருவரை கைது செய்வதாக வைத்துக் கொள்வோம். அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் கேஸ் தோற்று போனது என்றால் அந்த போலீஸார் கைது செய்யப்படுவாரா? கிடையாது.

ஆனால், அமலாக்கத்துறை அப்படி அல்ல. அமலாக்கத்துறையால் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் முகாந்திரம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிக்கு அபராதம் உண்டு. அது மட்டுமல்ல, அவர் கைதும் செய்யப்படுவார். எனவேதான், அமலாக்கத்துறை ஒரு வழக்கில் இறங்கினால் அங்கு நிச்சயம் குற்றம் நடந்திருக்கிறது என்று தைரியமாக நாம் சொல்லலாம்.

அப்படி சிக்கியவர்தான் செந்தில் பாலாஜி. ஆனால், திமுக அரசு பெரிய ராஜத்தந்திரம் செய்வதாக நினைத்துக் கொண்டு, செந்தில் பாலாஜியை நமக்கு கண்ணுக்கு தெரியாமல் போக்கு காட்டி வந்தது. இதுவரை செந்தில் பாலாஜியை போலீஸ் ஜீப்பில் யாராவது பார்க்க முடிந்ததா? ஆனால் நேற்றைக்கு தான் செந்தில் பாலாஜி போலீஸ் ஜீப்பில் இருப்பதை பார்க்க முடிந்தது. அவரது முகத்தை பார்க்கும் பாக்கியம் நேற்றுதான் நமக்கு கிடைத்தது என எச். ராஜா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.