பெங்களூரு, : நிலுவையில் உள்ள பில் தொகையை விடுவிக்க, துணை முதல்வர் சிவகுமார் கமிஷன் கேட்பதாக, பெங்களூரு மாநகராட்சி கான்ட்ராக்டர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். பில் தொகையை விடுவிக்க அரசுக்கு உத்தரவிடும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில், கான்ட்ராக்டர்கள் செய்த பணிக்கு, பில் தொகை விடுவிக்க, அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
கர்நாடக கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணாவும், பா.ஜ., அமைச்சர்கள் சிலர் மீது குற்றம்சாட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கு, கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. மார்ச் மாதமே தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. பா.ஜ., ஆட்சியில் பணிகள் செய்த கான்ட்ராக்டர்களுக்கு பில் தொகை நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னரும், கான்ட்ராக்டர்களுக்கு பில் தொகை விடுவிக்கப்படவில்லை. கர்நாடக கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, நிலுவையில் உள்ள பில் தொகையை விடுவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தார்.
குமாரசாமி உறுதி
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட, வளர்ச்சி பணிகளை செய்த கான்ட்ராக்டர்களுக்கு 2,700 கோடி ரூபாய் பில் தொகை விடுவிக்கப்பட வேண்டி உள்ளது.
‘வேலை செய்த படங்கள், வீடியோக்களை சமர்ப்பித்தால் தான், பில் தொகை விடுவிக்கப்படும்’ என்று, பெங்களூரு நகர வளர்ச்சி துறையை தன்வசம் வைத்துள்ள, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டார். இதற்கு கான்ட்ராக்டர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
‘நாங்கள் ஒன்றும் உங்கள் வீட்டு பணத்தை கேட்வில்லை. வேலை செய்த பணத்தை தான் கேட்கிறோம்’ என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர். மாநகராட்சி அலுவலகம் முன், போராட்டமும் நடத்தி இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, முன்னாள் முதல்வர் குமாரசாமியை, மாநகராட்சி கான்ட்ராக்டர்கள் சங்கத்தினர் சந்தித்து பேசினர்.
பில் தொகையை அரசு விடுவிக்காதது குறித்து, தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். ‘எங்களுக்காக அரசிடம் பேச வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தனர். ‘கவலைப்பட வேண்டாம். நான் உங்களுடன் இருக்கிறேன். உங்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன்’ என்று, கான்ட்ராக்டர்களுக்கு ஆறுதல் கூறி குமாரசாமி அனுப்பி வைத்தார்.
சத்தியம் செய்ய தயாரா?
இந்நிலையில், பெங்களூரு கிருஷ்ணா அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையாவை, மாநகராட்சி கான்ட்ராக்டர்கள் சங்கத்தினர் நேற்று சந்தித்து பேசினர். பில் தொகையை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி, கோரிக்கை மனு அளித்தனர்.
இதன்பின், கான்ட்ராக்டர்கள் கூட்டாக அளித்த பேட்டி:
மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை செய்து உள்ளோம். ஆனால், கடந்த எட்டு மாதங்களாக பில் தொகையை அரசு விடுவிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை, முதலில் காரணம் காட்டினர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை ஒரு ரூபாய் கூட பில் தொகை தரவில்லை.
இப்படி செய்தால், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்ய வேண்டிய நிலை வரும். பில் தொகையை விடுவிக்க, துணை முதல்வர் சிவகுமார் கமிஷன் கேட்கிறார். இல்லை என்று அவர் மறுத்தால், கோவிலுக்கு வந்து சத்தியம் செய்ய தயாராக உள்ளாரா.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
என்னை பயமுறுத்த முடியாது
தன் மீது எழுந்த கமிஷன் புகார் குறித்து, துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
வேலை செய்த கான்ட்ராக்டர்களுக்கு பணம் விடுவிக்கப்படும். இதில் நான் தலையிட மாட்டேன். கடந்த காலத்தில் மாநகராட்சியில், என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். கான்ட்ராக்ட் கேட்டு ஒரு நாள் விண்ணபிப்பர். மறுநாள் ஆணை கிடைக்கும்.
அடுத்த, 20 நாட்களில் பணியை முடிப்பர். பணத்தை வாங்கி சென்றனர். ஒரு மாதத்தில் 1,000 கோடி ரூபாய்க்கு, பணிகள் நடந்ததாக சொல்கின்றனர். இது சாத்தியமா.
என் மீது கான்ட்ராக்டர்கள் கூறிய கமிஷன் குற்றச்சாட்டு பொய். எனக்கும் அரசியல் தெரியும். என் மீது புகார் கூறிய கான்ட்ராக்டர்கள் பின்னணியில் யார் உள்ளனர் என்றும் தெரியும். ஜனாதிபதி, கவர்னிடம் புகார் அளிப்போம் என மிரட்டுவர் என்பதும் தெரியும்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, எங்களிடம் கான்ட்ராக்டர்கள் வந்தனர். இப்போது, எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். அவ்வளவு தான் வித்தியாசம். பணிகள் முறையாக நடந்து உள்ளதா என்று உறுதி செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அவர்கள் சட்டப்படி சரிபார்ப்பர்.
கான்ட்ராக்டர்கள் விஷயத்தில் தலையிடும் அவசியம் இல்லை. எந்த அழுத்தத்தையும் தாங்க தயாராக உள்ளேன். மற்றவர்களை பயமுறுத்துவது போல, என்னை பயமுறுத்த முடியாது. மாநகராட்சியில் நடந்த, ஊழல்கள் குறித்து விசாரணை நடக்கிறது. வேலை செய்தவர்களுக்கு பணம் கிடைக்கும். கொஞ்சம் காத்திருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், பில் தொகையை விடுவிக்க அரசுக்கு உத்தரவிடும்படி, மாநகராட்சி கான்ட்ராக்டர்கள் சங்கத்தினர், கவர்னர் தாவர்சந்த் கெலாட் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.
முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசிய, மாநகராட்சி கான்ட்ராக்டர்கள், பில் தொகையை விடுவிக்க கோரிக்கை வைத்தனர். இடம்: கிருஷ்ணா இல்லம், பெங்களூரு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்