கர்நாடக அரசியல் களம் சற்று வித்தியாசமானது. ஒரு கட்சி தலைவர்களை பற்றி, இன்னொரு கட்சி தலைவர்கள் புகழ்ந்து பேசுவர். அடுத்த சில நிமிடங்களில், புகழ்ந்து பேசிய வாயால் இகழ்ந்தும் பேசுவர். ஒரு சில நேரங்களில், ஒருமையிலும் திட்டிக் கொள்வர்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை ‘உருப்படாத மகன்’ என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகனும், தற்போதைய அமைச்சருமான பிரியங்க் கார்கே விமர்சித்தார். பதிலுக்கு சோனியா ‘விஷ கன்னி’ என்று, பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் விமர்சித்து இருந்தார்.
‘மல்லிகார்ஜுன கார்கே, அவரது குடும்பத்தை கொல்ல வேண்டும்’ என்று, பா.ஜ., பிரமுகர் மணிகாந்தா ரத்தோட் பேசிய ஆடியோ சர்ச்சையானது. சட்டசபை தேர்தலுக்கு பின், அரசியல் கட்சி தலைவர்கள் அடங்கி விடுவர் என்று பார்த்தால், தற்போது தான் வார்த்தை மோதல் அதிகரித்து உள்ளது. உடுப்பி ஆபாச வீடியோ வழக்கு குறித்து, கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ‘இது விளையாட்டு தனமாக நடந்தது’ என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உடுப்பி பா.ஜ., – எம்.எல்.ஏ., யஷ்பால் ரமேஷ் சுவர்ணா, பரமேஸ்வர் மகனின் பாலினம் குறித்து விமர்சித்தார்.
பா.ஜ., பெண் பிரமுகரான சகுந்தலா என்பவர், ‘முதல்வரின் வீட்டு பெண்களை வீடியோ எடுத்தால், விளையாட்டு தனமாக நடந்தது என்று சொல்வாரா’ என்றார். பா.ஜ., ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திரா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் நிறம், தலைமுடி குறித்து விமர்சித்து பேசினார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
‘அரக ஞானேந்திரா என்ன பெரிய அழகனா’ என்று, அமைச்சர் சரணபசப்பா தர்ஷனாபூர் ஒருமையில் பேசி கிண்டல் செய்தார். இப்படி மாறி, மாறி அரசியல்வாதிகளின் குடும்பம், நிறம் குறித்து விமர்சனம் செய்யும், புதிய அரசியல் கலாசாரம் கர்நாடகாவில் உருவெடுத்து உள்ளது. ‘அரசியல் வேறு, குடும்பம் வேறு என்பதை புரிந்து, மக்கள் பிரதிநிதிகள் பொது இடத்தில் பேச வேண்டும்’ என்பதே, அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement