இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் அட்டாக் சிறையில், திறந்த கழிப்பறையுடன், எறும்புகள், பூச்சிகள் நிறைந்த சிறிய அறையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர், இம்ரான் கான் 70. இவர், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர்; தற்போது, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் என்ற கட்சியின் தலைவராக உள்ளார்.
இம்ரான் கானுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஏப்ரலில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.
தொடர்ந்து, கடந்த ஓராண்டில் மட்டும், இம்ரான் கானுக்கு எதிராக, 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே, ‘தோஷாகானா’ எனப்படும், அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து, லாகூரில் உள்ள வீட்டிலிருந்த இம்ரான் கானை கைது செய்த போலீசார், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று, அட்டாக் சிறையில் உள்ள இம்ரான் கானை, அவரது வழக்கறிஞர் நயீம் ஹைதர் பன்ஜோதா சந்தித்து பேசினார்.
இதன் பின், செய்தியாளர்களிடம் நயீம் ஹைதர் பன்ஜோதா கூறியதாவது:
சிறையில், இம்ரான் கானுக்கு மூன்றாம் வகுப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அவர் முன்னாள் பிரதமராக இருந்தும், திறந்த கழிப்பறையுடன், எறும்புகள், பூச்சிகள் நிறைந்த ஒரு சிறிய அறையில் உள்ளார்.
காற்று வசதி, வெளிச்சம் இல்லாத அறையில், அவர் அடைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதியை நடத்துவது போல் அவரை நடத்துகின்றனர். இந்த வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம். விரைவில் இம்ரான் விடுதலை ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்