இம்பால், மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில், ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி அமைதி பேச்சுகளை விரைவாக முடிக்கும்படி நாகா சமூகத்தினர் பேரணி நடத்தினர்.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், வன்முறை சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில், 2015ல் மத்திய அரசுடன் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் அமைப்பு பேச்சு நடத்தியது.
இதைத் தொடர்ந்து அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
மற்றொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
மணிப்பூரின் மலைப் பகுதிகளில் நாகா மற்றும் கூகி – ஜோ சமூகத்தினர் வசித்து வருகின்றனர். குறிப்பாக தமேங்லாங்க், சேனாபதி, உக்ருல், சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாகா மக்கள் பெருமளவு வசிக்கின்றனர்.
மத்திய அரசுடன் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமைதி பேச்சுகளை விரைவாக நடத்தி, ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கோரி, நாகா மக்கள் நேற்று பேரணி நடத்தினர்.
ஐக்கிய நாகா கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் இந்த பேரணி நடந்தது. இதற்கு, கூகி சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மணிப்பூர் சட்டசபையின், 60 எம்.எல்.ஏ.,க்களில், 10 பேர் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில், ஏழு பேர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள்.
அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி, வரும் 21ல் துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில், இந்த 10 எம்.எல். ஏ.,க்கள் பங்கேற்கக் கூடாது என, நாகா அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
அமித் ஷாவுடன் சந்திப்பு
மணிப்பூரில் கூகி உள்ளிட்ட பழங்குடியினர்களின் கூட்டமைப்பான, ஐ.டி.எல்.எப்., நிர்வாகிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, புதுடில்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.தங்களுக்கென தனி பிராந்தியம், வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் மனுவை, இக்குழுவினர் வழங்கினர்.முன்னதாக இந்தக் கோரிக்கைகள், அசாம் ரைபிள்ஸ் படை வாயிலாக, அமித் ஷாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதைஅடுத்து, இந்த அமைப்பின் நிர்வாகிகளை சந்திக்க அமித் ஷா அழைப்பு விடுத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்