சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள் (55). இவர் சைக்கிளில் பழச்சாறு வியாபாரம் செய்து வந்தார். கடந்த 4.8.2023-ம் தேதி கோயம் சென்று பழங்கள் வாங்க ஐயம்பெருமாள் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி திருவொற்றியூர் எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள குடோன் அருகே ஐயம்பெருமாள் சடலமாக கிடந்தார். இது குறித்து திருவொற்றியூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று ஐயம்பெருமாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தன்னுடைய கணவர் ஐயம்பெருமாமளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி வனஜா புகாரளித்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

இந்த நிலையில் ஐயம்பெருமாளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரின் கழுத்து, விலா எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் போலீஸார் ஐயம்பெருமாளை யாரோ அடித்துக் கொலைசெய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது ஐயம்பெருமாள் இறந்து கிடந்த இடத்தில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் கொசு வலைக்காக இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.
இது குறித்து திருவொற்றியூர் போலீஸார், “பழவியாபாரி ஐயம்பெருமாள், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழம் வாங்கச் சென்றுவிட்டு இரவில் குடோனில் தூங்குவது வழக்கம். சம்பவத்தன்றும் ஐயம்பெருமாள் அங்கு தூங்கியிருக்கிறார். அப்போது அதே பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அனில்ஜா (45) என்பவரும் தூங்கியிருக்கிறார். கொசு தொல்லை காரணமாக அனில்ஜா, கொசு வலையை பயன்படுத்தியிருக்கிறார்.
அதைப் பார்த்த ஐயம்பெருமாள், அந்தக் கொசு வலையை எடுத்திருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியிருக்கிறது. ஆத்திரமடைந்த அனில்ஜா, பழவியாபாரி ஐயம்பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் ஐயம்பெருமாள் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து ஐயம்பெருமாளைக் கொலைசெய்த குற்றத்துக்காக அனில்ஜாவைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்”என்றனர்.