The central government in the appointment of the election commissioner…action! Removal of Chief Justice from Selection Committee | தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசு..அதிரடி! தேர்வு குழுவிலிருந்து தலைமை நீதிபதி நீக்கம்

புதுடில்லி,: தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் குழுவிலிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை, ராஜ்யசபாவில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த மார்ச்சில் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

‘தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்து, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

அபாயகரமான போக்கு

‘பார்லிமென்டில் புதிய சட்டம் இயற்றும் வரை, இந்த நடைமுறையே தொடரும்’ என, தீர்ப்புஅளித்தது.

இதற்கு முன், மத்திய அரசின் பரிந்துரையின்படி தேர்தல் ஆணையரை ஜனாதிபதி நியமிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இது தொடர்பாக புதிய மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில், ‘தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், கேபினெட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவே தேர்வு செய்யும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த குழுவில் இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக, மத்திய அமைச்சர் இடம் பெறுவார் என்றும், எந்த அமைச்சர் இடம் பெற வேண்டும் என்பதை பிரதமர் முடிவு செய்வார் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

ஆம் ஆத்மி தலைவரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ”உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக பலமுறை மத்திய அரசு செயல்பட்டு வந்துள்ளது. தற்போதும் இது தான் நடந்துள்ளது.

”இந்த மசோதாவின் வாயிலாக நேர்மையான தேர்தல் கேள்விக்குறியாகி விடும். இது, அபாயகரமான போக்கு,” என்றார்.

நடுநிலை

காங்., பொதுச்செயலர் வேணுகோபால் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தை, தன் கைப்பாவையாக்க பிரதமர் முயற்சிக்கிறார். தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான், உச்ச நீதிமன்றம் அந்த குழுவை அமைத்தது.

ஆனால், ஒருதலைபட்சமான தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என பிரதமர் நினைக்கிறார்.

இது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணான, தன்னிச்சையான மசோதா. இந்த மசோதா, எந்த வடிவத்தில் கொண்டு வரப்பட்டாலும், அதை எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், ”இந்த மசோதா, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இது, பார்லிமென்டில் நிறைவேறினாலும், உச்ச நீதிமன்றத்தால் நிச்சயம் ரத்து செய்யப்படும் என்பது என் கருத்து,” என்றார்.

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சுஷ்மிதா தேவ் கூறுகையில், ”உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் ஆணையரை நடுநிலையாளர்களே தேர்வு செய்ய வேண்டும்,” என்றார்.

பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.