தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சார்பாக சென்னையில் 129 குதிரைகளுக்கு ஊசி மூலம் மைக்ரோ சிப் செலுத்தும் பணியை திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார். அடுத்த கட்டமாக சென்னையைத் தாண்டி பிற இடங்களிலும் குதிரைகளுக்கு மைக்ரோசிப் செலுத்தும் பணி தொடரும் என்று இந்நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

”சென்னை கடற்கரைகளில் மக்களின் பொழுதுபோக்கிற்காகவும், சுற்றுலாவுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் குதிரைகள் பல வைரஸ் பாதிப்புகளுக்கும், கடற்கரையில் இருக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தப் பிரச்னையை பிற துறைகளோடு சேர்ந்து சரிசெய்யும் முயற்சியில் உள்ளோம். முதற்கட்டமாக இந்த மைக்ரோசிப், குதிரைகள் தொலைந்து போகாமல் கண்காணிக்கவும், குதிரைகளுக்கு முறையான பராமரிப்பு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யவும் உதவும்” என்றார் கிருத்திகா.
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினர் ஸ்ருதி வினோத் ராஜ் , ”கொரோனாவிற்குப் பின், சில குதிரை உரிமையாளர்கள், குதிரைகளை சரியாக பராமரிப்பதில்லை என்று எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. பாதிக்கப்பட்ட குதிரைகளை மீட்டு முகாம்களில் தங்க வைத்தோம். ஆனால், இடப் பற்றாக்குறையால் குதிரைகளை சரியாக பராமரிக்க முடியவில்லை. இதனால், பிரச்னைக்கு முன்பே இந்தக் குதிரைகளைக் கண்கானிக்க முடிவுசெய்தோம்.

குதிரைகளுக்கு செலுத்தப்படும் மைக்ரோ சிப்களில், தனித்துவமான அடையாள எண்கள் இருக்கும். அதை ஸ்கேன் செய்து பார்க்கும் போது, குதிரைக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்பட்டது, அந்தக் குதிரை எங்கே இருக்கிறது போன்ற தகவல்களைப் பெற முடியும். அடுத்ததாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற குதிரைகளை பொழுதுபோகிற்காக அதிகம் பயன்படுத்தும் இடங்களுக்கு சென்று இந்த மைக்ரோசிப் செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடவுள்ளோம்.
அதேபோல, சென்னையில் இருக்கும் குதிரை உரிமையாளர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தங்கள் குதிரையை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு குதிரைகளுக்கு உடற்தகுதி சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழ் இல்லாமல், அல்லது உடற்தகுதி இல்லாத குதிரைகளை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தக்கூடாது” என்றார்.
ஏற்கெனவே பல நாடுகளில் நாய், பூனை, ஆடு, மாடு, பறவைகள், பாம்புகளுக்குக் கூட உரிமையாளர்கள் மைக்ரோசிப்பிங் செய்கின்றனர். இந்தியாவிலும் இது போன்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் கால்நடைகளைப் பராமரிப்பது வரவேற்கத்தக்கது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில், கிருத்திகா உதயநிதி, இந்தாண்டு சுத்தமான கழிவறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘கக்கூஸ் ஃபெஸ்டிவல்’ நடைபெறும் என்றார்.