நாங்குநேரி சம்பவம்.. அன்புமணியை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்.. "அன்றைக்கு பேசியது மறந்துவிட்டதா?"

நெல்லை:
நாங்குநேரில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவனை சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் தொடர்பாக பாமக தலைவர்

அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அன்புமணியின் இந்த அறிக்கையையும், அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உறைய வைத்துள்ளது. அங்கு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சின்னதுரை என்ற பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதை தடுக்க வந்த அவரது தங்கையையும் அந்த மாணவர்கள் வெட்டி இருக்கிறார்கள். மேலும், சின்னதுரையின் தாத்தாவை மாணவர்கள் தள்ளிவிட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதுதொடர்பாக 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “நாங்குநேரியில் நிகழ்ந்துள்ள கொடூர நிகழ்வு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கல்வி வழங்கும் பள்ளியிலேயே சாதி மண்டிக்கிடப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அன்புமணியின் இந்தக் கருத்தையும், அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அப்படி என்னதான் அன்புமணி ராமதாஸ் பேசிவிட்டார்?

கடந்த மாதம் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மதம் இருக்கிறது. ஒரு சாதி இருக்கிறது. மொழி இருக்கிறது. இனம் இருக்கிறது. இப்போது சாதி என்றாலே ஏதோ கெட்ட வார்த்தையை போல பலர் நினைக்கின்றனர். அய்யய்யோ.. சாதியா.. என்பது போல பார்க்கிறார்கள்.

சாதியில் என்ன கெட்டவார்த்தை இருக்கிறது. சாதி என்பது ஒரு அழகிய சொல் என்று நான் கூறுவேன். ஏனென்றால் சாதியிலே அழகான வழிமுறைகள் இருக்கின்றன. அழகான பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் நாம் கடைப்பிடிக்க வேண்டும். முற்போக்குவாதிகள் என தங்களை தாங்களே சொல்லிக்கொள்ளும் சிலர், சாதியை ஒழிக்கனும், மதத்தை ஒழிக்கனும்னு கிளம்பி விடுகிறார்கள். யாராலும் எதையுமே ஒழிக்க முடியாது.” என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தற்போது நெட்டிசன்கள் அன்புமணி ராமதாஸின் பழைய பேச்சு அடங்கிய வீடியோவை பதிவிட்டு, அவரை விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.