விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், பிரபல நடிகருமான மறைந்த என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழாவினை தெலுங்கு தேசம் கட்சியினரும், என்.டி. ஆரின் குடும்பத்தாரும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
வெளிநாட்டில் வாழும் தெலுங்கர்களும் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடினர். இந்நிலையில், என்.டி.ராமாராவின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் 28-ம் தேதி வெளியிட உள்ளதாக, ஆந்திர மாநில பாஜக தலைவரும், என்.டி.ஆரின் மகளுமான புரந்தேஸ்வரி நேற்று தெரிவித்தார்.
அந்த நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செப்பு, 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் ஜிங் ஆகியவை கலந்திருக்கும், இவ்விழாவில் என். டி. ராமாராவின் குடும்பத்தார் அனைவரும் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.