மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 8 பேர் கடந்த மாத தொடக்கத்தில் பா.ஜ.க கூட்டணி அரசில் அமைச்சர்களாக சேர்ந்துள்ளனர். கட்சித் தலைவர் சரத் பவாரை எதிர்த்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்துள்ள அஜித் பவார், தற்போது கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். அதோடு சரத் பவாருடன் சமாதானமாக போகவும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே சரத் பவாரை அஜித் பவார் மூன்று முறை சந்தித்து பேசி சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் சரத் பவாரை சமாதானப்படுத்த முடியவில்லை.

சரத் பவாருடன் சமாதானமாக போக முயற்சி செய்து கொண்டிருந்தாலும், கட்சியின் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று அஜித் பவார் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அஜித் பவாரை தங்களது பக்கம் இழுத்துவிட்ட போதிலும், சரத் பவாரையும் தங்களது பக்கம் கொண்டு வரவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நேற்று புனேயில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சரத் பவாரை அஜித் பவார் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
இச்சந்திப்புக்கு பிறகு சரத் பவார் உடனே புறப்பட்டு சென்றுவிட்டார். ஒரு மணி நேரம் கழித்த பிறகுதான் அஜித் பவார் புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீலும் கலந்துகொண்டார். பிற்பகல் ஒரு மணிக்கு தொழிலதிபர் வீட்டிற்கு வந்த சரத் பவார், மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவில்லை. இச்சந்திப்பு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமோல் மித்கரி கூறுகையில், “இது இரு தலைவர்களின் குடும்ப சந்திப்பாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ அதுல் பட்கல்கர் இது குறித்து கூறுகையில், “இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அஜித் பவாரும், சரத் பவாரும் உறவினர்கள்” என்று குறிப்பிட்டார். அஜித் பவாரும், சரத் பவாரும் புனேயில் தனித்தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தனக்கு 40 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் அவர் கூட்டிய கூட்டத்தில் 30 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். சரத் பவார் அணியும் தங்களுக்கு 21 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறுகிறது.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs