புதுடில்லி:தலைநகர் டில்லியில் வாலிபர் கைது செய்யப்பட்டு, 21 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியைச் சேர்ந்தவர் லால் சிங் சத்தார்,32. இவர், ம.பி.,யின் புர்ஹான்பூரில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கி டில்லியில் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
கடந்த 4ம் தேதி, டில்லி காந்தி மியூசியம் அருகே ஆயுதம் சப்ளை செய்வதற்காக வரும் தகவலை மாநகரப் போலீசின் சிறப்புப் பிரிவு கண்டுபிடித்தது.
இதையடுத்து, டில்லி மாநகரப் போலீசின் சிறப்புப் பிரிவு கமிஷனர் ஹெச்.ஜி.எஸ். தலிவால் தலைமையில் போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.
அன்று மாலை 3:20 மணிக்கு அங்கு வந்த சத்தார் சுற்றி வளைக்கப்பட்டார். அவரிடமிருந்து 21 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, தலிவால் கூறுகையில், “சட்டவிரோத ஆயுதக் குழுவை சேர்ந்த சாகர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் பியாசியுடன், லால் சிங் சத்தாருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை விசாரணையில் கண்டுபிடித்தோம். ஆயுத விற்பனைக்காக நண்பர்களிடம் கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை அடகு வைத்தும் 7,000 ரூபாய்க்கு கைத்துப்பாக்கியை வாங்கி, அதை 30,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்,”என்றார்.
21 பசுக்கள் மீட்பு
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டம் மஹு கிராமம் அருகே டில்லி – -மும்பை விரைவுச் சாலையில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு லாரி நிற்காமல் சென்றது. போலீசார் அதை விரட்டிச் சென்றனர். ஆனால், லாரியில் இருந்தவர்கள் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
லாரியில் இருந்த பசு கடத்தல்காரர் தவுபீக் காயம் அடைந்த நிலையில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். அவரது லாரியில் இருந்து 21 பசு மாடுகள் மீட்கப்பட்டன. ஆனால், அவரது கூட்டாளி தப்பினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement