பிரேசிலியா-வெளி நாடுகளில் இருந்து பரிசாகப் பெற்ற பொருட்களை முறைகேடாக விற்று பணம் சம்பாதித்ததாக, பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 2022ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், அப்போது அதிபராக இருந்த, ஜெய்ர் போல்சனாரோ, 68, தோல்வி அடைந்தார்.
போராட்டம்
இதை பொறுத்துக் கொள்ள முடியாத அவரது ஆதரவாளர்கள், நாடு முழுதும் போராட்டங்கள் நடத்தியதில் வன்முறை வெடித்தது.
இதற்கிடையே, அதிபர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 2030ம் ஆண்டு வரை அதிபர் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு இந்தாண்டு துவக்கத்தில், அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இப்படி பல்வேறு வழக்குகளில், விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ள ஜெய்ர் போல்சனாரோ மீது, தற்போது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர் அதிபராக இருந்த போது, மேற்காசிய நாடான சவுதி அரேபியா அரசு அளித்த பரிசுப் பொருட்களை, முறைகேடாக விற்பனை செய்து பணம் சம்பாதித்தார் என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கடந்த 2019ல், சவுதி அரேபியா அரசு பரிசாக அளித்த இரண்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை, ஜெய்ர் போல்சனாரோவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர், அமெரிக்காவில் உள்ள பிரபல கடைக்கு விற்பனை செய்து, 56.41 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதற்கான தொகை, அவரது தந்தையின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
சிறைத் தண்டனை
இதுகுறித்து தொடர்ந்து விசாரித்தால், பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை, ஜெய்ர் போல்சனாரோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின், பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்